Aaron Finch Joins KKR: இங்கிலாந்து வீரருக்கு பதிலாக கொல்கத்தா அணிக்காக களமிறங்கும் ஆரோன் பிஞ்ச்..!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியதால் அவருக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் ஆரோன் பிஞ்ச். கடந்த டி20 உலககோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தியவர். சிறந்த அதிரடி ஆட்டக்காரராக இருந்தாலும் ஆரோன் பிஞ்ச் இந்த முறை ஏலத்தில் எந்த அணியாலும் கண்டுகொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரராக ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பயோ பபுள் விதியால் ஏற்பட்ட சோர்வால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆரோன் பிஞ்ச் இந்த ஏலத்தில் அடிப்படை விலையான ரூபாய் 1.50 கோடிக்கு கூட ஏலம் போகவில்லை. இந்த நிலையில், அவர் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான ஆரோன் பிஞ்ச் இதுவரை ஐ.பி.எல். ஆடியுள்ள 8 அணிகளுக்காகவும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடினார். ஆனால், எந்த அணியிலும் நிலையான இடத்தை அவர் பிடித்ததில்லை.
ஆரோன் பிஞ்சிற்கு இது 11வது ஐ.பி.எல். தொடர் ஆகும். அவர் 2010ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 2011, 2012ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும், 2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காகவும், 2014ம் ஆண்டு ஹைதரபாத் அணிக்காகவும், 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணிக்காகவும், 2018ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும், 2020ம் ஆண்டு பெங்களூர் அணிக்காக ஆடினார். தற்போது, 2022ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆட உள்ளார். இதன் மூலம் 9 அணிகளுக்காக ஆடிய ஒரே வீரர் என்ற பெருமை ஆரோன் பிஞ்சிற்கு மட்டுமே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
35 வயதான ஆரோன் பிஞ்ச் இதுவரை 87 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2005 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 88 ரன்களை குவித்துள்ளார். 14 அரைசதங்களை விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 88 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 686 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 15 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 172 ரன் விளாசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்