IPL 2022: மும்பை அணியின் புதிய திட்டம்.. இந்த மூவரில் ஒருவர்தான் அடுத்த கேப்டனா? அப்போ ரோஹித்?
ஒவ்வொரு சீசனிலும் மும்பை அணி மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். ஆனால், இம்முறை அந்த எதிர்ப்பார்ப்புகளை தகற்றும் வகையில் வரிசையாக தோல்விகளை மட்டும் சந்தித்திருக்கிறது.
2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை, மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி இருக்கும் 8 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணி என்ற பெயரை பெற்றது.
இந்நிலையில், ஒவ்வொரு சீசனிலும் மும்பை அணி மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். ஆனால், இம்முறை அந்த எதிர்ப்பார்ப்புகளை தகற்றும் வகையில் வரிசையாக தோல்விகளை மட்டும் சந்தித்திருக்கிறது. இதனால், கேப்டன் ரோஹித் ஷர்மாவை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால், மும்பை அணியின் கேப்டனாக வேறு யாரேனும் நியமிக்கப்படலாம் என்ற கருத்து பரவால நிலவி வருகிறது. இந்நிலையில், மும்பை அணியின் கேப்டனாக நியமிக்க தகுதியான மூவர் யார் என்பதை பார்க்கலாம்.
ஜஸ்ப்ரித் பும்ரா
2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பும்ரா, அந்த அணிக்காக பல முக்கிய போட்டிகளில் வெற்றியை ஈட்டி இருக்கிறார். போட்டிகளை வென்று தரும் முக்கிய பவுலராக இருக்கிறார் பும்ரா. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்காக இந்திய அணியின் துணை கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டார். இதனால், ரோஹித்திற்கு அடுத்து அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
சூர்யகுமார் யாதவ்
இந்த சீசனில், மும்பை அணியின் ஒரே ஆறுதலாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். தொடர்ந்து தனி அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் வட்டாரத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இந்திய அணியில் இடம் பிடித்தபோதும் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுக்கான போட்டியில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இஷான் கிஷன்
2022 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் முன்னிலையில் இருப்பவர் இஷான் கிஷன். ஆனால், இந்த சீசனில் இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். அவர் தற்காலிகமாக ஃபார்மில் இல்லாதபோதும், மும்பை அணியின் நம்பிக்கை வீரர்களில் இஷான் கிஷனுக்கு தனி இடம் உண்டு. மும்பை அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியை வழிநடத்தி வரும் நிலையில், அவர் இடத்தை அடுத்து நிரப்பப் போவது இஷான் கிஷனாக இருக்கலாம் என்ற செய்திகள் சுற்றி வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்