IPL 2021 : 2021 ஐ.பி.எல்லில், அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா?
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடித்த முதல் 5 வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் நிறைவுபெற்றது. முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நிகழ்ந்த பல்வேறு சாதனைகளை கீழே காணலாம்.
டாப் 5 அதிக ரன்கள் :
- ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். அவர் நடப்பு தொடரில் 16 போட்டிகளில் ஆடி 16 இன்னிங்சிலும் பேட் செய்து 635 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 101 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார். அவர் 1 சதம், 4 அரைசதம் அடித்துள்ளார்.
- பாப் டு ப்ளிசிஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பாப் டுப்ளிசிஸ் 16 போட்டிகளில் ஆடி 16 போட்டிகளிலும் பேட்டிங் செய்து 633 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 95 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளார். இந்த தொடரில் மட்டும் பாப் டுப்ளிசிஸ் 6 அரைசதங்களை அடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 86 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
- கே.எல். ராகுல் :
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளார். 13 போட்டிகளில் மட்டுமே ஆடிய கே.எல்.ராகுல் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங் செய்து 3 முறை ஆட்டமிழக்காமல் பேட் செய்துள்ளார். அவர் 626 ரன்களை இந்த தொடரில் குவித்துள்ளார். தனிநபர் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 98 ரன்களை அடித்துள்ளார். இவற்றில் 6 அரைசதங்கள் அடங்கும்.
- ஷிகர்தவான்:
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான ஷிகர்தவான் 16 போட்டிகளில் ஆடி 587 ரன்களை குவித்துள்ளார். ஒரு முறை ஆட்டமிழக்காமலும் இருந்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 92 ரன்களை எடுத்துள்ளார். இவற்றில் மூன்று முறை அரைசதங்களும் அடங்கும்.
- கிளென் மேக்ஸ்வேல் :
பெங்களூர் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வந்த மேக்ஸ்வெல் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவர் 15 போட்டிகளில் ஆடி 14 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளார். 2 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அவர் இந்த தொடரில் 513 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 78 ரன்களை ஒரு போட்டியில் மேக்ஸ்வெல் குவித்துள்ளார். நடப்பு தொடரில் அவர் மொத்தம் 6 அரைசதங்களை அடித்துள்ளார். மேற்கண்ட நான்கு வீரர்களும் ஒவ்வொரு அணிக்கும் தொடக்க வீரர்கள் ஆவர். ஆனால், மேக்ஸ்வெல் மூன்றாவது அல்லது நான்காவது விக்கெட்டிற்கு இறங்கி ஆடியவர்.