ப்ளே ஆஃப்பும் டெல்லியும்.. சோக வரலாற்றை மாற்றி எழுதுமா ரிஷப் பண்ட் படை ?
ஐபிஎல் தொடரின் இரண்டாவது ப்ளே ஆஃப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 15ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடும். ஆகவே இந்தப் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்து ப்ளே போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்று இரு அணிகளுமே தீவிர முனைப்புடன் உள்ளனர். இந்தச் சூழலில் ப்ளே ஆஃப் சுற்று போட்டி என்றாலே அது டெல்லி அணிக்கு ஒரு சோகமான வரலாறாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை டெல்லி அணி 9 முறை ப்ளே ஆஃப் போட்டியில் விளையாடி உள்ளது. அதில் 7 முறை தோல்வியை சந்தித்துள்ளது. அதில் மூன்று முறை ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும், ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் இடமும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்கன் சார்ஜர்ஸ் அணியிடமும் தோல்வி அடைந்துள்ளது.
குறிப்பாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் களமிறங்கிய சேவாக் தலைமையிலான அணி கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி யூசஃப் பதானின் (40) அதிரடி ஆட்டத்தால் 163 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஜெயவர்தனே 40 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் அப்போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் 2 விக்கெட் வீழ்த்தி கொல்கத்தா வெற்றிக்கு வித்திட்டார்.
எனவே 9 ஆண்டுகளுக்கு முன்பாக ப்ளே ஆஃப் சுற்று போட்டியில் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கு ரிஷப் பண்ட் தலைமையிலான அணி தகுந்த பதிலடி கொடுக்குமா என்பதை பொருத்திருந்தான் பார்க்கவேண்டும். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்த இரு அணிகள் மோதிய போட்டிகளில் டெல்லி அணி 14 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் டெல்லியும், ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த 'லார்ட்' ஷர்துல் தாகூர்- ரிசர்வ் பட்டியலில் அக்ஷர் பட்டேல் !