IPL 2021: கொல்கத்தாவிடம் தோல்வி : தரம் தாழ்ந்த பெங்களூர் ரசிகர்கள் - டேன் கிறிஸ்டியன், மேக்ஸ்வெல் வேதனை
எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததால் பெங்களூர் அணி வீரர் டேன் கிறிஸ்டியனை தரக்குறைவாக விமர்சித்து சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவது கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். 2021ம் தொடர் பரபரப்பான கடட்த்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியை இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.
பெங்களூர் அணிக்காக விராட்கோலி கேப்டனாக பொறுப்பு வகித்த கடைசி ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வியடைந்தது பெங்களூர் ரசிகர்கள் மட்டுமின்றி கோலியின் ரசிகர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிலர் சமூக வலைதளங்களில் பெங்களூர் அணியின் சில வீரர்களை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
— Glenn Maxwell (@Gmaxi_32) October 11, 2021
— Glenn Maxwell (@Gmaxi_32) October 11, 2021
இதுதொடர்பாக, பெங்களூர் அணி வீரர் மேக்ஸ்வெல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“ ஆர்.சி.பி. அணிக்கு மிகச்சிறந்த தொடராக இது அமைந்தது. துரதிஷ்டவசமாக எங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அதற்கு முன்பாகவே விழுந்துவிட்டோம். சமூக வலைதளம் மூலம் எங்கள் மீது குப்பைகளை வீசுவது உண்மையில் வேதனையாக இருக்கிறது. நாங்களும் மனிதர்கள்தான். ஒவ்வொரு நாளும் எங்களின் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறோம். அவதூறு பரப்புவதற்கு பதிலாக, நாகரீகமான மனிதர்களாக இருக்க முயலுங்கள்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் தோல்விக்கு காரணமாக இருந்த டேன் கிறிஸ்டியனின் மனைவி டென்னா அட்சலாசின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக பெங்களூரின் தோல்விக்கு சிலர் மிகவும் ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். இது கிறிஸ்டியனுக்கும், பெங்களூர் அணிக்கும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேன் கிறஸ்டியன், என் மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட்டுகளை பார்த்தேன். எனக்கு இந்த இரவு சிறப்பான ஆட்டமாக அமையவில்லை. ஆனால், இது விளையாட்டுதான். எது எப்படியோ தயவு செய்து இதை விடுங்கள். அவர்கள் மிகவும் மோசமாக உள்ளனர். தயவு செய்து நிறுத்துங்கள். இப்போது அவர்கள் பொய்யான கணக்குகள் மூலமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். கம்பீரமான மக்களாக இருங்கள்.” இவ்வாறு அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். டேன் கிறிஸ்டியனின் மனைவி டென்னா அட்சலாஸ் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் அணியின் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் வீசிய 17வது ஓவரில் சுனில் நரைன் அடித்த மூன்று சிக்ஸர்கள் ஆட்டத்தையே மாற்றியது. மேலும், 6 பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் கிறிஸ்டியன் வீசிய முதல் 3 பந்திலே கொல்கத்தா வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் ரசிகர்களின் இந்த மோசமான செயல்பாடு பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் பெங்களூர் அணி முக்கிய வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. கேப்டன் கோலி மட்டும் 39 ரன்கள் அதிகபட்சமாக சேர்த்தார். ஏபிடிவிலியர்ஸ், மேக்ஸ்வேல், படிக்கல், பரத் பெரியளவில் ரன்கள் எடுக்கவில்லை. டேன் கிறிஸ்டியன் ஓவரில் சுனில் நரைன் அடித்த மூன்று சிக்ஸர் ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் மாற்றியது.