New Jinx: சொந்த மண்ணில் மண்ணை கவ்விய அணிகள்.. வரலாற்றை மாற்றுமா பெங்களூரு..? டெல்லிக்கு இது சாதகமா?
எதிர் அணியை அவர்கள் மண்ணில் சென்று வெல்வதென்பது கிரிக்கெட்டில் கடினமான விஷயம் என்பது பரவலாக கூறப்படும் விஷயம். இந்த வாரம் முழுவதும் அதனை நிகழ்த்தி இருக்கிறது ஐபிஎல் 2023
ஐபிஎல் களம் ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக செல்ல, இந்த வாரம் நடந்த அத்தனை போட்டிகளும் சூடு பிடித்தன. எல்லா போட்டிகளுமே கடைசி ஓவர் வரை வர, பெரும்பாலான போட்டிகள் கடைசி பந்தில் வந்து முடிந்தன. அதே போல இந்த எல்லா போட்டிகளுக்கும் இன்னொரு பெரிய ஒற்றுமை உள்ளது. இந்த வாரம் திங்கட்கிழமை முதல் நடந்த இந்த போட்டியிலும் ஹோம் டீம் வெல்லவில்லை. எல்லா போட்டிகளையுமே போட்டியை நடத்தும் அணி தோல்வியை சந்தித்திருப்பது ஆச்சர்யமான விஷயமாக மாறி உள்ளது. பொதுவாக வெளியில் சென்று ஆடும் போட்டிகளை, அதாவது எதிர் அணியை அவர்கள் மண்ணில் சென்று வெல்வதென்பது கிரிக்கெட்டில் அது எந்த வகையான ஃபார்மட்டாக இருந்தாலும், கடினமான விஷயம் என்பது பரவலாக கூறப்படும் விஷயம்.
ஹோம் மேட்ச் ஜிங்க்ஸ்
வெளியில் சென்று வெல்வது பலமுறை நடந்துள்ளது என்றாலும் அதற்கு கொஞ்சம் கூடுதல் உழைப்பு தேவைப்படும் என்பது அனுபவஸ்தர்கள் கூறும் கூற்று. ஏனென்றால் அந்த அணியின் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள், எங்கு திரும்பினாலும் அவர்கள் ஜெர்சி வண்ணம் இருக்கும். அவர்களது ரசிகர்கள் கூட்டாக சேர்ந்து கோஷங்கள் எழுப்புவார்கள். இவை அளிக்கும் உத்வேகம் என்பது மிகவும் பெரிய சாதகமாக அமையும். அதில் கிடைக்கும் நம்பிக்கை ஷாட்களில், பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல எதிரணிக்கு அப்படியே எதிராக செயல்படும். இவை நேரடியாக நடக்கும் விஷயம் என்றாலும், இவற்றால் ஆன தாக்கம் போட்டி முழுவதும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விதி சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கு பொருந்த வாய்ப்பில்லை, எங்கு சென்றாலும் அவர்கள் அணி ரசிகர்கள் நிறைந்து காணப்படுவார்கள்.
ஹோம் போட்டிகளில் தோற்கும் அணிகள்
இப்படி இந்த ஹோம் மேட்ச் நிலைமைகளை மீறி வெற்றி பெறும் கடினமான விஷயங்கள் கடந்த வாரம் வித்தியாசமாக மாறியுள்ள நிலையை காணமுடிகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டி வரை ஹோம் அணி தோல்வியை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி ஆர்சிபியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. த்ரில் போட்டியான இதில் ஆர்சிபி அணி நன்றாகவே ஆடி இருந்தாலும் சிறிய சிறிய தவறுகள் மூலம் ஆட்டத்தை விட்டனர். கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் மிஸ்ஃபீல்டு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லியில் நடந்த நிலையில், மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.
இன்றும் இந்த நிலை தொடருமா?
அடுத்ததாக சென்னையில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் வென்றதுதான் சென்னை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நன்றாக ஆடி வந்த தோனியால் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட முடியாமல் போனது, மஞ்சள் நிறத்தில் நிறைந்து காட்சியளித்த சேப்பாக்கத்தை கவலையில் ஆழ்த்தியது. மொஹாலியில் நடைபெற்ற அடுத்த போட்டியான குஜராத் - பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி கடைசி ஓவரில் வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற நேற்றைய போட்டியின் கதை நாம் அறிந்ததே. 228 ரன்களை துரத்த முடியாமல் ஈடன் கார்டன் ரசிகர்களை ஏமாற்றியது கேகேஆர் அணி. இந்த வார நிலைமைகள் இப்படி இருக்க இந்த ஜிங்க்ஸ் தொடருமா என்பதை காண ரசிகரகப் ஆவலோடு காத்திருக்கின்றனர். வார இறுதி என்பதால் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகின்றது. ஹோம் மேட்ச் ஜிங்க்ஸ் படி, இதுவரை வெற்றியே பெறாத டெல்லி அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டி லக்னோவில், எல்எஸ்ஜி அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.