Watch Video: வென்று கொடுத்த ஷஷாங்க் சிங்; பாராட்ட மனமில்லாத பஞ்சாப் நிர்வாகம்; திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!
GT vs PBKS IPL 2024: பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷஷாங்க் சிங் 29 பந்தில் 61 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
17வது ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியும் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகின்றது. இதில் 17வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. தனது சொந்த மைதானத்தில் களமிறங்கும் குஜராத் அணி இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி அதிரடியாக தனது வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது, ஷஷாங்க் சிங். இவர் 29 பந்தில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 61 ரன்கள் சேர்த்து இறுதி வரை களத்தில் இருந்தார். ஷஷாங்க் தனது அரைசதத்தினை எட்டியபோது அவரது அணியில் இருந்த பல வீரர்கள் உட்பட பஞ்சாப் அணியைச் சேர்ந்தவர்கள் என பெரும்பாலும் யாரும் ஷஷாங்க்கை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டவில்லை. குறிப்பாக பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ள ஷிகர் தவான் எந்தவிதமான மகிழ்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தார். பல வீரர்களும் அணி நிர்வாகத்தினரும் அமைதியாகவே இருந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெருக்கடியான சூழலில் பஞ்சாப் அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்த ஷஷாங்க் சிங் தனது அரைசதத்தினை 25 பந்தில் எட்டினார். ஐபிஎல் தொடரில் இவர் விளாசும் முதல் அரைசதம் இதுவாகும். தனது திறமையான ஆட்டத்தினால், ஷஷாங்க் சிங் இலக்கை சேஸ் செய்ய்ம்போது அரைசதம் விளாசியதுடன், நெருக்கடியான சூழலை திறமையாக கையாண்டு அரைசதம் விளாசியுள்ளார். இவரது அதிரடியான ஆட்டத்தினால் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பஞ்சாப் அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள் எனப்பட்ட வீரர்கள் அனைவரும் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 74 ரன்களாக இருந்தபோதே தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். அதன் பின்னர் களம் கண்ட ஷஷாங்க் சிங் அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக விளங்கியுள்ளார். இவரது அரைசதத்தினை உற்சாகப்படுத்தாத பஞ்சாப் அணி நிர்வாகத்தினர் மற்றும் பஞ்சாப் அணி வீரர்களுக்கு ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Romba romba worst raa dai... 👎🏻
— ℳя. வில்லங்கம் ✇ 🪄 (@Vineethian) April 5, 2024
Ipa tha note pandre... 💔 pic.twitter.com/AebZaujluX
ஏலத்தின் போது ஏற்பட்ட குழப்பம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. அப்போது பஞ்சாப் அணி 19 வயதுடைய ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக 32 வயதான ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்தனர். அதாவது குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்தனர். தவறாக இவரை எடுத்துவிட்டதாகக் கூறி பஞ்சாப் அணி இவரை அப்போதே விடுவிக்க ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரியது. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் பஞ்சாப் அணியின் கோரிக்கையை ஏற்கவில்லை.