GT vs DC IPL 2023: வெற்றிப்பயணத்தை தொடருமா குஜராத்.. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலிலும் நேரடியாக ஒளிபரப்பப்டுகிறது.
டாஸ் வென்ற குஜராத்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணி வென்று புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது. ஆனால், டெல்லி அணியோ தனது முதல் லீக் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வெற்றிப்பயணத்தை தொடர குஜராத் அணியும், புள்ளிக்கணக்கை தொடங்க டெல்லியும் முனைப்பு காட்டி வருகின்றன.
குஜராத் அணி நிலவரம்:
குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடப்பு சாம்பியனான அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. கடந்த ஆட்டத்தில் சுப்மன் கில், விருத்திமான் சஹா ஆகியோர் சிறப்பாக ஆடினர். இந்த போட்டியிலும் அவர்களது அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணி நிலவரம்:
டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் லக்னோ அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த போட்டியில் கேப்டன் வார்னர் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்காதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அந்த அணியில் பெரிய அளவில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை. அதேநேரம் இன்றைய போட்டி சொந்த மைதானத்தில் நடைபெறுவது டெல்லி அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்:
இரு அணிகளும் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது. இதனால் அதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி அணி வரலாறு..!
போட்டிகள்: 70
வெற்றி: 31
தோல்வி: 38
முடிவு இல்லை: 1
முதலில் பேட்டிங் வெற்றி: 13
சேஸிங்: 18
அதிகபட்சமாக கடந்த 2011 ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது.
குறைந்தபட்சமாக் கடந்த 2013ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 83 ரன்களுக்குள் டெல்லி அணி சுருண்டது.