10 நாட்களாக ஐசியு-வில் தந்தை… காயத்தால் 1 வருட இடைவெளி… அற்புதமாக பந்துவீசி வெற்றி நாயகனான மோஹ்சின் கான்!
2023 ஐபிஎல்லில் இது அவருக்கு இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதி ஓவரில் அதிரடிக்கு பெயர் போன டிம் டேவிட்டிற்கு எதிராக 11 ரன்களை டிஃபன்ட் செய்து வெற்றியை வசமாக்கியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசிக்க காரணமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொஹின் கான் அவருடைய இந்த அற்புதமான ஆட்டத்தை 10 நாட்கள் ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தனது நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு அர்ப்பணித்தார்.
மோஹ்சின் கான்
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான அவர் கடந்த ஆண்டு பரபரப்பான சீசனைக் கொண்டிருந்தார், ஆனால் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த ஆண்டு ஐபிஎல்லின் பெரும்பகுதியையும் தவறவிட்டார். 2023 ஐபிஎல்லில் இது அவருக்கு இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதி ஓவரில் அதிரடிக்கு பெயர் போன டிம் டேவிட்டிற்கு எதிராக 11 ரன்களை டிஃபன்ட் செய்து வெற்றியை வசமாக்கியுள்ளார். அவரது அற்புதமான பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் பாதையில் ஒரு படி நெருங்கியுள்ளது.
ஐசியு-வில் தந்தை
"காயத்தால் ஒரு வருடம் கழித்து விளையாடுகிறேன். இது மிகவும் கடினமான நேரம். நேற்று என் தந்தை ICUவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார். அவருக்காகதான் நான் விளையாடுகிறேன், அவர் நான் நன்றாக விளையாடுவதை பார்த்துக் கொண்டிருப்பார். கடந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடாவிட்டாலும், இந்த விளையாட்டை நன்றாக விளையாடி அணி மற்றும் நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்துள்ளது மகிழ்ச்சி," என்றார்.
கடைசி ஓவர் பிளான் குறித்து
"ரன்-அப் அதே தான், கடைசி ஓவரில் அதை மாற்றவில்லை. நான் என்னை அமைதியாக வைக்க முயற்சித்தேன், ஸ்கோர்போர்டைப் பார்க்காமல், 6 பந்துகளை நன்றாக வீசினேன். பிட்ச்சில் பந்து நின்று செல்வதால், நான் மெதுவாக பந்து வீச முயற்சித்தேன், பின்னர் யார்க்கருக்கு மாற்றினேன்." என்று கூறினார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா, க்ளோஸான தருணங்களில் தனது அணியால் வெற்றி பெற முடியவில்லை என்றும், சேஸிங்கின் இரண்டாவது பாதிதான் தோல்விக்கு காரணம் என்றும் கூறினார்.
ரோஹித் ஷர்மா பேட்டி
"நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறாத சிறிய சிறிய தருணங்கள் ஆட்டத்தில் இருந்தன. நாங்கள் ஆடுகளத்தை மிகவும் நன்றாக மதிப்பீடு செய்தோம், அது பேட்டிங் செய்ய ஒரு நல்ல பிட்ச். அந்த ஸ்கோர் நிச்சயமாக சேஸ் செய்யக்கூடியதுதான். இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் நாங்கள் சொதப்பினோம். நாங்கள் பந்துவீச்சிலும் இரண்டாம் பாதியில் அதிக ரன்கள் கொடுத்தோம். கடைசி மூன்று ஓவர்கள் மிகவும் மோசமாக செயல்பட்டோம். ஆனால் நாங்கள் ஆரம்பத்தில் பேட்டிங் செய்த வீதம் நன்றாக இருந்தது. நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் நான் சொன்னது போல் இரண்டாவது பாதியில் நாங்கள் சொதப்பினோம். ஸ்டோனிஸ் நன்றாக விளையாடினார். அவர் ஷாட்களை நேராக அடித்தார். இது போன்ற ஒரு ஆடுகளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இது அவரிடமிருந்து ஒரு அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது" என்றார்.