Dhoni | சி.எஸ்.கே அணிக்கு தோனி வந்த கதை! - சுவாரசியத் தகவல் பகிர்ந்த வி.பி.சந்திரசேகர்
2019ல் விபி சந்திரசேகர் மறைந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வளர்ச்சியில் அவரது பங்கு குறித்துப் பேசுவது தவிர்க்க முடியாதது.
1983 உலகக் கோப்பைக்குப் பிறகான இந்திய அணியின் அதிவேக ஆட்டக்காரர்களில் ஒருவர் விபி சந்திரசேகர். Aggressive Chandrasekar என கிரிக்கெட் வர்ணனையாளர்களால் வர்ணிக்கப்பட்டவர். 1986/88 காலகட்டங்களில் சர்வதேச அணிக்காக விளையாடினாலும் அதன் பிறகு அவர் தமிழ்நாடு அணிக்குதான் தொடர்ந்து விளையாடினார். பின்னர் 2012ல் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். அதன்பிறகான காலகட்டத்தில்தான் ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். 2019ல் விபி சந்திரசேகர் மறைந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வளர்ச்சியில் அவரது பங்கு குறித்துப் பேசுவது தவிர்க்க முடியாதது. ஐ.பி.எஸ். தொடர்களின் அசைக்க முடியாத அரக்கனாக சி.எஸ்.கே அணி இருந்து வருவது எல்லோரும் அறிந்ததே. அதற்கு முக்கியக் காரணம் மகேந்திர சிங் தோனி ‘ப்ளீட் எல்லோவ்’ அணியின் கேப்டனாக அமைந்ததே.
தோனி:
தோனி கேப்டனாக அணிக்கு வந்த கதை பற்றிப் பகிர்கிறார் வி.பி.சந்திரசேகர், "டீம் உருவாக்கும்போது நீ யாரை எடுப்பே என ஸ்ரீகாந்த் கேட்டார். நான் தோனி என்றேன். ‘ஏன்பா சேவாக்கை எடுக்கலாமே?’ என்றார். சேவாக்கெல்லாம் அப்போது பெரிய பெயர். ஆனால் மும்பைக்கு சச்சின், ஆந்திராவுக்கு லக்ஷ்மண் என இருந்தது போல தமிழ்நாட்டுக்கு அப்போது யாரும் இல்லை. தோனி சென்னை அணிக்கு நியமிக்கப்பட்டால் அப்படியான அடையாளமாக இருப்பார் என எனக்குத் தோன்றியது. தோனியை நான் முதன்முதலி ஐதராபாத்தில் செலக்ஷன் கமிட்டியில் இருக்கும்போது பார்த்தேன். இந்தியா -பாகிஸ்தான் தொடருக்கான செலக்ஷன் அது. விக்கெட் கீப்பர் வரவே இல்லை. நைட் 11 மணிக்கு என் ஹோட்டல் கதவு அறையை யாரோ தட்டுகிறார்கள். திறந்தால், தோல்பட்டை வரை முடியுடன் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். ‘ஐ எம் தோனி’ என்றான். என்னப்பா இத்தனை மணிக்கு வந்திருக்கே என்றேன்?, ‘ஐ எம் ஹியர்’ என அப்பாவித்தனமாகச் சிரித்தான். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. அதன் பிறகான ஹிஸ்ட்ரி கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியும்.
தோனியை சென்னை அணிக்கு ஏலம் எடுப்பது என நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் அவருக்கான ஒரு இலக்கை நிர்ணயித்து இருந்தேன். மற்ற அணியினர் எல்லோரும் முட்டி மோதிப் பார்த்தார்கள். முடியவில்லை. நான் முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் ஏலம் கேட்டேன். நாம் ரியாக்ஷன் எதுவும் காட்டிவிட்டால் மற்ற பிளேயர்களை ஏலம் எடுக்க முடியாத மாதிரி செய்துவிடுவார்கள். அதன்படி கொஞ்சம் பொறுமை காத்து தோனியை சென்னை அணிக்கு ஏலம் எடுத்தேன்" என்கிறார்.