Dhoni Retirement Answer: ஓய்வு எப்போது? ஒரே கேள்வியும், தோனியின் மாஸ் பதில்களும்! ஒரு ப்ளாஷ்பேக்!
தோனி ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான எழுந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பு வகித்து வருகிறார். இந்திய அணிக்காக மட்டுமின்றி சென்னை அணிக்காகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சென்னை அணிக்காக 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தோனிக்கு தற்போது 40 வயதாகியுள்ளதால் கடந்த சில வருடங்களாகவே அவர் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவது குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தோனி அடுத்த முறையும் சென்னை அணிக்காக ஆடுவேன் என்று கூறி சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
தோனி ஐ.பி.எல். போட்டிகளில் ஆடுவாரா என்று 2019ம் ஆண்டு முதல் எழுந்து வரும் சந்தேகங்களும், அதற்கு தோனி அளித்து வரும் பதில்களும் தற்போது வைரலாகி வருகிறது. 2018ம் ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, 2019ம் ஆண்டு மும்பையிடம் சாம்பியன் பட்டத்தை இழந்து தோல்வி அடைந்தது. அப்போது, தோனியிடம் அடுத்தாண்டு விளையாடுவீர்களா? என்று கேட்டபோது விளையாடுவேன் என்று நம்புகிறேன் என்றார்.
2020ம் ஆண்டு சென்னை அணி மிகவும் மோசமாடி ஆடி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியபோது, தோனியிடம் இந்தாண்டுடன் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து வெளியேறுவீர்களா? என்று கேட்கப்பட்டபோது, டெபினெட்லி நாட் (கண்டிப்பாக இல்லை) என்று கூறினார். அப்போது, அவரது டெபினெட்லி நாட் மிகவும் வைரலாகியது.
தோனி கூறியதுபோல அடுத்தாண்டு சென்னை அணி பலத்துடன் திரும்பி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில், இன்றும் தோனியிடம் அடுத்த ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவீர்களா? என்று கேட்டபோது சென்னைக்காக நான் அடுத்த வருடம் விளையாடாமல் போனால் அது நியாயமல்ல என்று கூறியுள்ளார். இதனால், சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தபோது தோனியிடம் அடுத்த உலககோப்பையில் விளையாடுவீர்களா? என்று கேட்டபோது நிருபரிடம் தன்னுடைய உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்பி அடுத்த உலககோப்பை நிச்சயம் விளையாடுவேன் என்று கூறியதுடன் 2019ம் ஆண்டு கோலி தலைமையில் இந்திய அணிக்காக உலககோப்பையில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். போட்டிகள் தவிர இதர அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்