(Source: ECI/ABP News/ABP Majha)
CSK vs GT IPL 2023 Final: விளையாடிய மழை.. இன்று மீண்டும் இறுதிப்போட்டி..! மகுடம் சூடப்போவது குஜராத்தா..? சென்னையா..?
ஐபிஎல் தொடரில் ரிசர்வ் டே முறையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ( CSK vs GT IPL 2023 Final ) சென்னை மற்றும் குஜராத் அணிகள் கோப்பைக்காக இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரில் ரிசர்வ் டே முறையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ( CSK vs GT IPL 2023 Final ) சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாபாத்தில் குவிந்த ரசிகர்கள்:
பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகான இறுதிப்போட்டிக்கு, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடக்கவிருந்த, இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து இருந்தனர். அது சென்னையா, குஜராத்தா என சந்தேகம் எழும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் மஞ்சள் உடையில் மைதானத்தை ஆக்கிரமித்து இருந்தனர். இதனால், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.
குறுக்கே வந்த கனமழை:
ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த கனவையும் நீர்த்து போகச் செய்தது அகமதாபாத்தில் கொட்டி தீர்த்த கனமழை. மழை சில மணி நேரம் இடைவெளி விட்டால் கூட போட்டியை நடத்திவிடலாம் என, ஐபிஎல் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்து வந்தது. இதனால், கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்திலேயே காத்துக்கிடந்தனர். இரவு 11 மணிக்குப் பிறகும் கூட மழை விடாததால், ரிசர்வ் டே முறையில் இறுதிப்போட்டி இன்று நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
இன்று இறுதிப்போட்டி:
இதையடுத்து, ரிசர்வ் டே முறையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியின் நேரலையை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே அமைகிறது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமாக அமையலாம். அதேநேரம், 180 ரன்களுக்கும் எதிரணியை கட்டுப்படுத்துவதும் அவசியமாக கருதப்படுகிறது.
சிறப்பாக செயல்பட வாய்ப்பு:
இன்றைய போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் முகமது ஷமியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
உத்தே அணி விவரம்:
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
குஜராத்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேட்ச்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மோகித் ஷர்மா, நூர் அகமது, முகமது ஷமி
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு - அதேநேரம் தோனி மேஜிக் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது