MS Dhoni: ஒரே ஒரு கண்டிஷன்? பிசிசிஐ ஒகே சொன்னா 2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் - சிஎஸ்கே அப்டேட்
MS Dhoni: சென்னை அணிக்காக 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
MS Dhoni: சென்னை அணிக்காக 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவது, பிசிசிஐ-யின் முடிவில் தான் உள்ளது என கூறப்படுகிறது.
தோனியின் ஐபிஎல் எதிர்காலம்..!
நடப்பண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசன் முடிவடைந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி, அடுத்த சீசனிலும் தொடர்வாரா? மாட்டாரா என்பது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார், ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்தினார். சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும், ருதுராஜின் தலைமை சென்னை அணிக்கு ஏற்றதாக இருந்ததாகவே கருதப்பட்டது. ஆனால், ஒரு வீரராக தோனிக்கு எல்லாம் முடிந்துவிட்டதா? என்றால், அது அடுத்த சீசன் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகமும் பிசிசிஐயும் எடுக்கும் தக்கவைப்பு முடிவைப் பொறுத்ததே என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 - வீரர்களை தக்கவைக்கும் விதி:
ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன் ஒரு மெகா ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்பதே தற்போது வரையிலான கணிப்பாக உள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அணி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த சூழலில் தான், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் உடனான பிசிசிஐ-யின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதில் வீரர்களை தக்கவைக்கும் விதி தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. ஐபிஎல் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமங் அமீன், கூட்டத்திற்காக உரிமையாளருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. சரியான இடம் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், மும்பையில் உள்ள வான்கடே மைதான வளாகத்திற்குள் அமைந்துள்ள BCCI தலைமையகமான கிரிக்கெட் மையத்தில் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை அணியின் திட்டம் என்ன?
தற்போதைய சூழலில் சூப்பர் கிங்ஸால் தக்கவைக்கப்படும் வீரர்களில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா , மதீஷா பத்திரனா மற்றும் சிவம் துபே ஆகியோர் அடங்குவர் என கூறப்படுகிறது. இதனிடையே, வெளியாகியுள்ள தகவலின்படி, ஒவ்வொரு அணிக்கும் 5 முதல் 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்தால் மட்டுமே, ஒரு வீரராக சென்னை அணியில் தோனி தொடர்வார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே, மும்பை போன்ற மற்ற அணி நிர்வாகங்களும், 5 முதல் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும், ரைட் டு மேட்ச் கார்ட் போன்ற வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. 2-3 ஆண்டுகள் சிரமப்பட்டு கட்டமைக்கப்படும் அணிகளை, மெகா ஏலம் என்ற முறையில் உடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதனால், 5-6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும், சென்னை அணிக்காக தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.