CSK Vs RCB: டாஸ் வென்ற சென்னை..பந்து வீச்சு தேர்வு; அதிரடி பேட்டிங்கை தொடங்குமா RCB?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 67 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை, குஜராத், டெல்லி, பஞ்சாப் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்காக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
சி.எஸ்.கே - ஆர்.சி.பி:
சென்னை அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி, 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். மறுமுனையில் ஆரம்பத்தில் தொடர் தோல்விகளால் தடுமாறினாலும், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் வென்று பெங்களூர் அணி, தற்போது பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற தீவிரம் காட்டி வருகிறது.
இன்றைய போட்டியில் வெற்றி என்பதை தாண்டி குறிப்பிட்ட சில வரம்புகளுடன் வெற்றி பெற்றால் மட்டுமே, பெங்களூர் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்:
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அந்தவகையில் முதலில் பேட்டிங்க் செய்யும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடி ஆட்டத்தை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்)
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்)
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ண் ஷர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்