CSK IPL 2024: தோனி குட்பாய் சொன்னால் அடுத்த கேப்டன் யார்? சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் விளக்கம்
CSK IPL 2024 Dhoni: ஐபிஎல் தொடரில் தோனிக்கு பிறகு சென்னை அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து, அணியில் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.
CSK IPL 2024 Dhoni: நடப்பாண்டு ஐபில் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் 2024:
இந்தியாவில் ஒவ்வொரு கோடை காலத்திலும் தவிர்க்க முடியாத, விளையாட்டு திருவிழாவாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் பணம் புரளும் விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல், இதுவரை 16 சீசன்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் 21 போட்டிகளுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், மற்ற போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூர் அணியுடன் மோத உள்ளது. இதற்காக, தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள், நடப்பு தொடருக்கான பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
ஓய்வு பெறுகிறாரா தோனி?
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு, இதுதான் கடைசி சீசன் என கடந்த சில சீசன்களாகவே தொடர்ந்து பேச்சு அடிபடுகிறது. ஆனாலும், அவர் தொடர்ந்து களம் கண்டு வருகிறார். ஆனால், நடப்பாண்டுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது உறுதி என பல்வேறு தரப்பினரும் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். 42 வயதான தோனி இப்போதும் சென்னை அணிக்காக கேப்டன்சிப்பிலும், விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால், பேட்டிங்கில் முன்பு இருந்த ஒரு அதிரடியை தற்போது காண முடியவில்லை. இதுகுறித்து அவரே வெளிப்படையாகவும் பேசியுள்ளார். இதனால், நடப்பு தொடருடன் தோனி நிச்சயம் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்ற கேள்வி மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.
தோனிக்கு அடுத்து யார்? - சிஎஸ்கே விளக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் குறித்து, அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றி பேச வேண்டாம். அதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் (தோனி) விட்டுவிடுங்கள். அவர்கள் முடிவு செய்து என்னிடம் தகவல் சொன்ன பிறகு அதை உங்களிடம் தெரிவிக்கிறேன். அதுவரை அமைதியாக இருங்கள். நடப்பு ஐ.பி.எல். தொடரில் நாக்-அவுட் சுற்றை எட்டுவதுதான் முதல் இலக்கு. அதில்தான் எங்களது கவனம் இருக்கும்” என காசி விஸ்வநாதன் கூறினார். சென்னை அணியின் தொடக்க வீரராக உள்ள ருதுராஜ் கெய்க்வாட், புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.