IPL 2021 CSK : முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், சி.எஸ்.கே டீமுக்கும் இருக்கும் பந்தம் தெரியுமா?
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் நேரில் கண்டு ரசித்தனர்.
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியை வீரர்களின் குடும்பத்தினர் நேரில் கண்டுகளித்தனர். இதில் மற்றொரு சுவாரஸ்யமான விசயம் முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தினர் அனைவரும் நேரில் சென்று பார்த்ததுதான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடத்தொடங்கியது முதலே ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் அவரது மகன் இன்பநிதி, சபரீசன் மற்றும் அவரது குடும்பத்தினர், அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக் தன் குடும்பத்துடன் உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலைஞர் கருணாநிதி மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர்.
இந்தியா விளையாடும் போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசிப்பார். இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டுமல்ல எந்த அணி விளையாடினாலும் ஆர்வமாக பார்ப்பாராம். அரசியலில் புள்ளிவிவரங்களை தெரிந்து வைத்திருக்கும் கருணாநிதி, கிரிக்கெட் தொடர்பான புள்ளி விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பாராம். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளையும் ரசித்து பார்ப்பார் கருணாநிதி. சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றால் நேரடியாகவே சென்று பார்க்கும் அளவிற்கு தீவிர ரசிகர். போட்டி நடக்கும்போது எங்காவது வெளியில் இருந்தால் வீட்டிற்கு போன் செய்து ஸ்கோர் கேட்பாராம். சில சமயங்களில் கனிமொழி போனை எடுத்து விவரம் கேட்கும்போது ஃபோனை அம்மாவிடம் குடு என்று சொல்லி ஸ்கோரை கேட்டு தெரிந்து கொள்வாராம். இதை கனிமொழி ஒரு போட்டியில் கூறியிருக்கிறார்.
அதேபோல, கிரிக்கெட் பார்ப்பதற்காக கூட்டங்கள் நடக்கும் நேரத்தை அதற்குத் தகுந்தாற் போல மாற்றிக்கொள்வாராம்; சில நேரங்களில் மீட்டிங்கை கேன்சலும் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார் ஒரு பத்திரிகையாளர். கருணாநிதி கிரிக்கெட்டை தனியாக அமர்ந்து பார்க்கமாட்டார். கூடவே அவருக்கு யாராவது இருக்க வேண்டும். அப்படி கருணாநிதியுடன் இருந்தவர் மறைந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன். ஜெ.அன்பழகனும் தீவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர். அதே போல சென்னை சூப்பர் கிங்ஸிற்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. கருணாநிதிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் சென்னை அணி தோற்றால் மிகவும் வருத்தப்படுவார்; அவருக்கு ரொம்ப பிடித்த வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனிதான் என்று கூறியிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன். ஒருமுறை உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது முன்பு கபில் தேவ், இப்போது மகேந்திரசிங் தோனி என்று பதிலளித்திருந்தார் கருணாநிதி.
இந்திய அணி உலகக்கோப்பையில் வெற்றிபெற்றபோது தோனியை அழைத்து 3 கோடி ரூபாயை வழங்கினார் கருணாநிதி. ஆப்பரேஷன் செய்த பிறகு மைதானங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். ஆனாலும் டிவியில் தொடர்ந்து பார்ப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும்போது, ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் அவரது குழந்தைகள், சபரீசன் குடும்பத்தினர் உள்பட பலரும் ஆஜராகி உற்சாகத்துடன் பார்ப்பார்கள். அதுவும் சென்னை அணியின் டீசர்ட் அணிந்து பார்ப்பார்கள்.
அந்த அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸிற்கும் கருணாநிதி குடும்பத்திற்குமான நெருக்கம் அதிகம். கருணாநிதி தொடங்கி தற்போது உதயநிதி ஸ்டாலின் வரை இந்த பந்தம் தொடர்கிறது. நேற்றைய போட்டிக்காக கூட மொத்த குடும்பத்தினரும் துபாய் சென்று போட்டியை ரசித்திருக்கின்றனர். ஸ்டாலின் நான் இங்கிருந்தே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டாராம். அதனால் துர்கா ஸ்டாலினும் துபாய் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. போட்டி முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவு ஸ்டாலினும் எந்த அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் என்பதை காட்டுகிறது. அந்த ட்வீட்டில் " சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மகேந்திர சிங் தோனியை அன்புடன் வரவேற்க சென்னை காத்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “தோல்வியில் இருந்து மீண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள தோனி தலைமையிலான சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும், அணி நிர்வாகம் மற்றும் சென்னை அணியின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டி முடிந்து இந்தியா திரும்பும் சென்னை அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று சென்னை ரசிகர்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்