IPL 2025: கோடிகளை கொட்டியும் ஏமாற்றும் இளசுகள், கோட்டை விட்ட ஸ்டார்கள் - புலம்பும் ஓனர்கள்
IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, ஏமாற்றி வரும் இளம் வீரர்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் சொதப்பி வரும் நட்சத்திர வீரர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் - இளம் வீரர்கள்
பல முன்னணி நட்சத்திரங்களை கூட கழற்றிவிட்ட சில அணி நிர்வாகங்கள், இளம் வீரர்கள் மீது பெரும் நம்பிக்கையில் கோடிகளை முதலீடு செய்து தக்க வைத்தன. கடந்த காலங்களில் அவர்கள் வெளிப்படுத்திய அபார திறனை நம்பி இந்த முடிவை எடுத்தனர். ஆனால், அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இந்த சீசனில் சில முக்கிய வீரர்கள் தவறியுள்ளனர். இது அணி நிர்வாகங்ளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி கோடிக்கணக்கில் முதலீடு செய்தும் சொதப்பிய இளம் வீரர்கள் மூன்று பேரின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சொதப்பும் இளசுகள்:
1. நிதிஷ் ரெட்டி - 2024 ஆம் ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் நிதீஷ் ரெட்டி ரூ.6 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். முன்னதாக ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவர், எதிர்கால நட்சத்திரமாக கருதப்பட்டார். ஆனால் ஐபிஎல் 2025 இல், அவரது ஃபார்ம் அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. 8 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் களமிறங்கி வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
2. ரிங்கு சிங் - கடந்த ஆண்டு ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒருவராக இருந்த ரிங்கு சிங் , ரூ.13 கோடி தக்கவைப்பு மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். இருப்பினும், இடது கை வீரர் இந்த சீசனில் ஃபார்மில் இல்லை, 8 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேநேரம், கடந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
3. துருவ் ஜுரெல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.14 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட துருவ் ஜூரெல் , தொடக்க ஆட்டத்தில் 70 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீசனை அட்டகாசமாக தொடங்கினார். இருப்பினும், அதன் பிறகு அவரது ஃபார்ம் குறைந்து, அடுத்த 7 இன்னிங்ஸ்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 போட்டிகளில் மொத்தம் 191 ரன்கள் எடுத்துள்ளார்.
ஏமாற்றும் நட்சத்திரங்கள்:
ஒருபுறம் நாளைய நட்சத்திரங்கள் என நம்பி தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்கள் சொதப்ப, அதற்கு நிகராக இன்றைய நட்சத்திர வீரர்களும் கோட்டை விட்டு வருகின்றனர். தனிநபராக வெற்றியை தேடிதரக்கூடியவர் என நம்பி கோடிகளில் சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆனால், அந்த நம்பிக்கையை உடைக்கும் விதமாக சில வீரர்களின் ஃபார்ம் உள்ளது.
கோட்டை விட்ட ஸ்டார்கள்
1. ரிஷப் பண்ட்: மெகா ஏலத்தின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியால் 27 கோடி ரூபாய்க்கு, ரிஷப் பண்ட் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரரானார். இருப்பினும், ஐபிஎல் 2025 இல் பண்ட் இதுவரை ஒரே ஒரு அரைசதம் மட்டுமே விளாசியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் 7வது வீரராக களமிறங்கியது, பண்டின் பேட்டிங் ஃபார்மை காட்டுகிறது. ஐபிஎல் 2025 இல் இதுவரை 13.25 என்ற மோசமான சராசரியுடன் எல்எஸ்ஜி அணிக்காக 9 போட்டிகளில் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
2. வெங்கடேஷ் ஐயர்: ஐபிஎல் 2025 சீசனுக்கு முந்தைய மெகா ஏலத்தின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு வாங்கியது. ஆனால், அவரால் அணி நிர்வாகம் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கமுடியவில்லை. ஐபிஎல் 2025 இல் இதுவரை கேகேஆருக்காக 8 போட்டிகளில் வெங்கடேஷ் 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், சராசரி 22.50 என்ற மோசமான சராசரியுடன்.
3. ரவீந்திர ஜடேஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ரவீந்திர ஜடேஜாவை ரூ. 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். இருப்பினும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அவரால் தனது விலையை நியாயப்படுத்த முடியவில்லை. 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை CSK அணிக்காக ஜடேஜா 8 போட்டிகளில் 145 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், சராசரி 29.00 என்ற மோசமான நிலையில் உள்ளார். 8 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
எஸ்கேப்பான ரோகித் சர்மா:
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை 16.30 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. ஆனால், அவர் களம் கண்ட முதல் 6 போட்டிகளில் 112 ரன்களை மட்டுமே சேர்த்தார்.ஒன்றில் கூட 30 ரன்களை கூட எட்டவில்லை. இதனால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், கடைசி இரண்டு போட்டிகளிலும் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு பங்களித்து கம்பேக் கொடுத்துள்ளார். இதனால், இந்த சொதப்பல் வீரர்களின் பட்டியலில் இருந்து ரோகித் சர்மா சற்றே விலகியுள்ளார்.




















