Foreign Leagues Cricket: வெளிநாட்டு டி20 லீக்குகளில் இந்திய வீரர்களா..? பி.சி.சி.ஐ. விரைவில் முடிவு...!
Indian Cricketers in Foreign Leagues: வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விராட்கோலி, ரோகித்சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விளையாட அனுமதிப்பது குறித்து விரைவில் பி.சி.சி.ஐ. முடிவு செய்ய உள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலககோப்பைத் தொடருக்கு பிறகு மிகப்பெரிய கொண்டாட்டமாக ஆண்டுதோறும் பார்க்கப்படுவது ஐ.பி.எல். தொடர். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் லாபத்தை கொட்டித் தரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படும் இந்திய வீரர்கள் பிற நாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.
இந்திய வீரர்களை பிற நாட்டின் லீக் போட்டிகளில் விளையாட அனுமதித்தால் ஐ.பி.எல். செல்வாக்கின் மதிப்பு குறைந்து விடும் என்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் உண்டு. இந்த நிலையில், மற்ற நாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட இந்திய அணியின் நட்சத்திர வீரர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு கோரிக்கை வலுத்துள்ளது. இதனால், இந்த விவகாரம் தொடர்பாக வரும் செப்டம்பர் மாதம் பி.சி.சி.ஐ. முக்கிய முடிவு எடுக்க உள்ளது. எனவே, வரும் செப்டம்பர் மாதம் இந்திய வீரர்கள் பிற நாட்டு லீக் போட்டிகளான கரிபீயன் லீக், பிக்பாஷ் லீக் போன்றவற்றில் ஆடுவார்களா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.
ஐ.பி.எல். போட்டிகளில் ஆடும் அணியின் உரிமையாளர்கள் பலரும் மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் ஆடும் அணியின் உரிமையாளராகவும், பங்குதாரராகவும், கூட்டு உரிமையாளராகவும் இருப்பதால் அவர்கள் பி.சி.சி.ஐ.யிடம் வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்களை ஆட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 லீக் தொடரில் ஆடும் அணிகள் 4-ன் உரிமையாளர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் ஆடும் அணிகளின் உரிமையாளர்கள்.
கரீபியன் லீக்கில் ஆடும் அணிகளில் 3 அணிகளின் உரிமையாளர்கள் கூட்டு உரிமையாளராகவும், உரிமையாளராகவும் ஐ.பி.எல்.லில் ஆடும் அணிகளுக்கு உள்ளனர். இதன் காரணமாகவே, அவர்கள் நட்சத்திரவீரர்களான விராட்கோலி, ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப்பண்டை வெளிநாட்டு லீக்குகளில் ஆட வைக்க முயற்சித்து வருகின்றனர். தற்போது வரை இந்திய கிரிக்கெட் வாரியம் மகளிர் அணி மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆடவர் அணியினரை மட்டுமே வெளிநாட்டு லீக்குகளில் ஆட அனுமதித்துள்ளனர்.
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் இந்தியாவைப் போன்று டி20 போட்டித் தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அந்த நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் ஆடினாலும் இந்திய வீரர்கள் ஆட வேண்டும் என்று அந்த நாட்டு ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், விராட்கோலி, ரோகித்சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் ஆடினால் தங்களது டி20 லீக் வருவாய் அதிகரிக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை இந்திய வீரர்களுக்கு அந்த அனுமதியை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்