IPL Play Off, Final Venue: ப்ளே ஆஃப் ஆட்டங்கள்.. இறுதிப்போட்டி எங்கு நடக்கப்போது..? துள்ளிக்குதிக்கும் சென்னை ரசிகர்கள்..!
தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐ.பி.எல். ப்ளே ஆஃப், இறுதி போட்டி எங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16ஆவது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னையில் தகுதி சுற்று போட்டிகள்:
தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐ.பி.எல். ப்ளே ஆப், இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23 தொடங்கி 28ஆம் தேதி வரை, ப்ளே ஆப், இறுதி போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
முதல் தகுதி சுற்று, மே 23ஆம் தேதி எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து, மே 24ஆம் தேதி எலிமினேட்டர் ஆட்டம் அதே மைதானத்தில் நடைபெறுகிறது.
அதேபோல, மே 26ஆம் தேதி, இரண்டாம் தகுதி சுற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இறுதி போட்டி, அதே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில்தான் நடைபெற்றது. அதில், குஜராத் அணி வெற்றிபெற்று கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது.
விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி ஐபிஎல் தொடர்:
இதுவரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய முதல் லீக் போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் கொல்கத்தா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி,வார்னர் தலைமையிலான டெல்லி அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமித்துள்ளன. அதேநேரம், சென்னை, குஜராத் அணிகள் தலா 5 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றுள்ளன. இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 3 மற்றும் 4வது இடங்களை பிடித்துள்ளன.
பெங்களூரு, மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகள் உடன், புள்ளிப்பட்டியலில் முறையே 5 முதல் 7வது இடத்தை வகிக்கின்றன. கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் தலா 4 புள்ளிகளுடன், 8 மற்றும் 9வது இடங்களிலும், டெல்லி அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.