’நான் பேச மாட்டேன்; என் பவுலிங் பேசும்!’ : Finger on the Lips சைகை குறித்து முகமது சிராஜ் விளக்கம்!
தன் உதட்டின் மீது விரல் வைத்து மௌனமாக இருக்கும்படி இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் காட்டிய சைகை சர்ச்சையாகி வருகிறது அதுகுறித்து தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் முகமது சிராஜ்.
தன் உதட்டின் மீது விரல் வைத்து மௌனமாக இருக்கும்படி இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் காட்டிய சைகை சர்ச்சையாகி வருகிறது அதுகுறித்து தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் முகமது சிராஜ்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது நாளின் முடிவில், இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து, அது ட்ராவில் முடிவடைந்தது. அதனால் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கடுமையாக உழைத்து வருகின்றன.
364 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 391 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஸ்டார் வீரராக ஜோ ரூட் இந்தப் போட்டியில் வெளிப்பட்டார். அவுட் ஆகாமல் அவர் எடுத்த 180 ரன்கள் இங்கிலாந்து அணியை முன்னணிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இந்திய அணியின் தரப்பில் பவுலர் முகமது சிராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 4 விக்கெட்களைக் கைப்பற்றிய அவரது 30 ஓவர்களில் இங்கிலாந்து வீரர்கள் 94 ரன்களே எடுத்திருந்தனர்.
இங்கிலாந்து பிட்ச்களின் தன்மை காரணமாக, இந்திய அணி பவுலர்களை அதிகமாக நம்பி வருகிறது. அதனால் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, பும்ரா, ஷமி, முகமது சிராஜ் என மிகச்சிறந்த பவுலர் படையே களமிறக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் திறமையாக விளையாடி வருகிறார். எனினும், விக்கெட்களை வீழ்த்திய பிறகு, பேட்ஸ்மேன்களை நோக்கி, முகமது சிராஜ் காட்டும் சைகைகள் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
விக்கெட் எடுத்தவுடன் பேட்ஸ்மேன்களை நோக்கி, தனது உதட்டின் மீது விரல் வைத்து மௌனமாக இருக்கும்படி முகமது சிராஜ் சைகை காட்டுவதால் அது இங்கிலாந்து வீரர்களைக் கோபப்படுத்தும் எனச் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய வீரரும், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் இருக்கும் தினேஷ் கார்த்திக் இதுகுறித்து பேசியிருந்த போது, ‘முகமது சிராஜ் தனது விக்கெட்களை வீழ்த்திய பிறகு செய்யும் மேனரிஸம் தேவையற்றது. அவரது கரியரின் தொடக்க காலம் இது என்பதால் அவர் இப்படி நடந்துகொள்கிறார் என்று கருதுகிறேன். அனுபவம் கூடக்கூட அவர் கற்றுக் கொள்வார்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மூன்றாம் நாள் போட்டிகளுக்குப் பிறகு ஆன்லைனில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் முகமது சிராஜிடம் அவரது இந்த சைகைக் கொண்டாட்டம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது முகமது சிராஜ், ‘என்னை விமர்சிப்பவர்களுக்கான செய்தி அது. என்னை விமர்சிப்பவர்கள் எப்போதும் என்னைப் பற்றி தவறாகவும், என்னால் இதைச் செய்ய முடியாது, அதைச் செய்ய முடியாது என்று கூறியும் வருகிறார்கள். அவர்களிடம், ‘நான் பேச மாட்டேன். என்னுடைய பவுலிங் பேசும் என்று உணர்த்தும் சைகை அது. எனவே அது என்னுடைய புதிய கொண்டாட்ட பாணி’ என்று விளக்கம் அளித்துள்ளார்.