‛புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ இங்கிலாந்து இம்சை அரசன் ‛ஜார்வோ’ கைது!
இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது, மைதானத்தின் உள்ளே அத்துமீறி உள்ளே நுழைந்து பார்ஸ்டோவை இடித்ததற்காக ஜார்வோவை தெற்கு லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் நகரத்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல்நாளில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடியது.
அந்த அணியின் பேர்ஸ்டோவும், போப்பும் பேட் செய்து கொண்டிருந்தனர். உமேஷ் யாதவும் பந்தை வீசுவதற்கு தயாராகி கொண்டிருந்தார். அப்போது மைதானத்திற்கு உள்ளே இந்திய அணியின் சீருடையுடன் வந்த ஜார்வோ என்ற நபர் ஒருவர் போப்பிற்கு பந்து வீசுவது போல வேகமாக ஓடி வந்தார். மேலும், பந்து வீசுவது போல கிரிசீன் உள்ளே வரை வந்து பந்துவீசவில்லை. ஆனால், கிரிசீன் அருகில் நின்ற இங்கிலாந்து வீரரை இடித்துவிட்டார்.
உடனடியாக, மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக உள்ளே வந்து ஜார்வோவை மைதானத்தை விட்டு அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், போட்டியின் போது குறுக்கே வந்த ஜார்வோ இங்கிலாந்து பேட்ஸ்மேனான பார்ஸ்டோவை இடித்து தள்ளியதற்காக, தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பார்ஸ்டோவை இடித்து தள்ளியதாக ஜார்வோவை அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது, அவர் லண்டன் ஓவலில் உள்ள காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஜார்வோ கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எங்களது இடங்களில் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு நடத்தையையும் பொறுத்துக்கொள்ளாது என்றும் கூறியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எங்களது பாதுகாப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் நெருக்கமாக வேலை செய்கிறது.
Unique action but effective. pic.twitter.com/pYyocOCrD4
— Dennis Jarvo (@DennisCricket_) September 3, 2021
ஜார்வோ ஏற்கனவே இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே லார்ட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போதும், இந்தியா பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது சத்தமே இன்றி பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதை கவனித்த நடுவர்கள் மற்றும் இந்திய வீரர்களிடம் நானும் இந்திய வீரர் என்பது போல இந்திய சீருடையை காட்டினார். பின்னர், அவரை மைதான பாதுகாப்பு காவலர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இறங்க வேண்டிய நேரத்தில் அவருக்கு பதிலாக இந்திய சீருடையுடன் முகக்கவசம் அணிந்து ஜார்வோ களமிறங்கினார். அப்போதும், மைதான பாதுகாப்பு காவலர்கள் அவரை வெளியேற்றினர்.
ஜார்வோ யூ டியூப் தொலைக்காட்சி ஒன்று வைத்துள்ளார். தனது யூ டியூப் தொலைக்காட்சியை பிரபலப்படுத்துவதற்காக அவர் இதுபோன்று மைதானங்களுக்கு உள்ளே செல்கிறார். அவர் இந்திய வீரராக உள்ளே சென்ற வீடியோவும், இந்திய பேட்ஸ்மேன் போல உள்ளே சென்ற வீடியோவும் ஜார்வோவின் யூ டியூப் தொலைக்காட்சியில் தற்போது வரை 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.