(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Eng: 50 ஆண்டுகால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்திய அணி?
லண்டன், ஓவலில் வரும் 2-ஆம் தேதி நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 50 ஆண்டுகால சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான அணி முற்றுப்புள்ளி வைக்குமா?
இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் லார்ட்சில் இந்தியாவும், லீட்சில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது காரணமாக இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதையடுத்து, தொடரின் முக்கியமான 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும் 2-ந் தேதி தொடங்க உள்ளது. லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி 1936ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது.
ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த மைதானத்தில் இந்திய அணி அதிகபட்சமாக 2007ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 664 ரன்களை குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். குறைந்தபட்சமாக 2014ம் ஆண்டு 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி அதிகபட்சமாக இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்சில் 594 ரன்களை குவித்துள்ளது. குறைந்தபட்சமாக 101 ரன்களை இங்கிலாந்து இந்த மைதானத்தில் எடுத்துள்ளது. உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவன்களில் ஒருவரான அனில் கும்ப்ளே இந்த மைதானத்தில் 2007ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து அசத்தினார்.
1971ம் ஆண்டு இந்த மைதானத்தில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களை எடுத்தது. இந்திய அணி 284 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. பகவத் சந்திரசேகர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 101 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் வென்று புதிய சாதனையையும் படைத்தது.
1971ம் ஆண்டிற்கு பிறகு 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஓவலில் ஆடியுள்ளது. ஆனால், இந்திய அணி ஒரு போட்டியில் கூட இதுவரை வெற்றி பெறவில்லை. இந்திய அணி ஓவல் மைதானத்தில் வெற்றி பெற்று கடந்த 24-ந் தேதியுடன் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா? என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்ப ஏற்பட்டுள்ளது.