French Open 2022: பிரஞ்சு ஓபனை வெல்லப்போவது யாரு?- இன்று முதல் தொடங்கும் டென்னிஸ் திருவிழா !
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரஞ்சு ஓபன் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
டென்னிஸ் உலகில் மண் தர ஆடுகளத்தில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடர் பிரஞ்சு ஓபன். இந்தாண்டிற்கான பிரஞ்சு ஓபன் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பிரஞ்சு ஓபன் தொடரை நோவக் ஜோகோவிச் வென்று அசத்தினார். இம்முறை பிரஞ்சு ஓபன் தொடரை வெல்ல ஜோகோவிச், நடால், மெத்வதேவ், சிட்சிபாஸ் ஆகிய வீரர்களிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இம்முறை நடால் மற்றும் ஜோகோவிச் ஆகிய இருவரும் ஒரே டிராவில் உள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் இம்முறை காலிறுதி போட்டியில் எதிராக மோதும் சூழல் உருவாகியுள்ளது. டிராவின் மற்றொரு பக்கத்தில் மெத்வதேவ் மற்றும் கடந்த முறை இறுதிப் போட்டியில் விளையாடிய சிட்சிபாஸ் ஆகியோர் உள்ளனர்.
One more sleep 😴🏟#RolandGarros pic.twitter.com/kmS7r4F4o3
— Roland-Garros (@rolandgarros) May 21, 2022
பிரஞ்சு ஓபன் வரலாற்றில் ரஃபேல் நடால் இதுவரை 13 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அடுத்த மாதம் தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தற்போது அவர் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். இந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வென்று அவர் நல்ல ஃபார்மில் உள்ளார். ஆகவே அவருடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான பிரஞ்சு ஓபன் தொடரை இம்முறை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண் தர ஆடுகளத்தில் ரஃபேல் நடால் எப்போதும் ஒரு தலைசிறந்த வீரராக வலம் வருகிறார். இதுவரை அவர் 91 ஏடிபி பட்டங்களை வென்றுள்ளார். அவற்றில் மண் தர ஆடுகளத்தில் நடைபெற்றுள்ள போட்டிகளில் 62 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தொடர்ந்து க்ளே ஆடுகளத்தின் கிங் என்று இவர் கருதப்படுகிறார். ரஃபேல் நடால் நாளை தன்னுடைய முதல் சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டன் தாம்சனை எதிர்த்து விளையாட உள்ளார். ஜோகோவிச் தன்னுடைய முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீரர் நிஷியோகாவை எதிர்த்து நாளை களமிறங்க உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்