5 சதம் வெளியில.. கே.எல்.ராகுலை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் சதமடித்த கே.எல்.ராகுலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 364 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நெருக்கடியான நேரத்தில் நிலைத்துநின்று ஆடிய கே.எல்.ராகுலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்ஜமாம் உல் ஹக் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கே.எல்.ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
“ கே.எல்.ராகுலைப் பற்றி பேசினால் அவர் அடித்துள்ள ஆறு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். அவர் அடித்த ஆறு சதங்களில் 5 சதங்கள் வெளிநாட்டு மைதானங்களில்தான் அடித்துள்ளார். கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் இரண்டாவது முறையாக இங்கிலாந்தில் சதமடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் அரிதாகிவிட்டது. மிகவும் குறைந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமே அவர்களது முதல் 8 அல்லது 10 சதங்களை வெளிநாட்டு மைதானங்களில் அடித்துள்ளனர்.
நீங்கள் கண்டிப்பாக பல வீரர்கள் வெளிநாட்டுகளில் சதங்களை அடித்து பார்த்திருப்பீர்கள். ஆனால், வழக்கமாக அவர்கள் அவர்களது முதல் இரு சதங்களை சொந்த மைதானத்தில்தான் அடித்திருப்பார்கள். அந்த அனுபவத்தின் மூலம் வெளிநாட்டில் சதங்கள் அடிப்பார்கள். ஆனால், கே.எல்.ராகுல் விஷயத்தில் அது அப்படியே எதிராக நடந்துள்ளது.
கே.எல்.ராகுலின் நம்பிக்கையுடன் ஆடிய ஆட்டம் சிறப்பாக இருந்தது. முதல் போட்டியில் கூட அவர் 84 ரன்களை குவித்திருந்தார். அந்த ரன் மிகவும் முக்கியமானது. அவர் இந்திய அணி முன்னிலை பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்”
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காம் தொடரின் முதல் போட்டியிலும் கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக முதல் இன்னிங்சில் 84 ரன்களை சேர்த்திருந்தார். இந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் 250 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 129 ரன்களை குவித்திருந்தார்.
கே.எல்.ராகுல் தனது முதல் டெஸ்ட் சதத்தை 2014ம் ஆண்டு தனது அறிமுகப் போட்டியிலே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக, அந்த நாட்டு மைதானமான சிட்னியில் அடித்து சாதனை படைத்தார். பின்னர், இலங்கையிலும், மேற்கிந்திய தீவுகளிலும், இங்கிலாந்தின் ஓவலிலும் சதம் அடித்திருந்தார். அவர் உள்நாட்டில் சென்னையில் மட்டுமே சதம் அடித்துள்ளார். தற்போது லார்ட்ஸ் மைதானத்திலும் சதம் அடித்துள்ளார். இதன்மூலம் 2014ம் ஆண்டிற்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த இந்தியர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.