தனது அணியின் புத்திசாலித்தனத்தை புகழ்ந்து தள்ளிய மெஸ்ஸி… குரோஷியாவை வென்றது குறித்து பேட்டி!
"சில நேரங்களில் நம் திட்டங்கள் சொதப்புகின்றன, நேர்த்தியாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உடனே அதனை மாற்றி சரியான பாதைக்கு கொண்டு வருவது ஸ்வாரஸ்யமாக உள்ளது", என்றார்.
செவ்வாய்கிழமை நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முந்தைய சுற்றில் நெதர்லாந்தை தோற்கடித்ததை விட, இந்த போட்டியில் இன்னும் சிறந்ததாக இருந்ததாக அர்ஜென்டினாவின் புத்திசாலித்தனத்தை லியோனல் மெஸ்ஸி பாராட்டினார். முதலில் மெஸ்ஸி முதல் பாதியில் கிடைத்த பெனால்டியை கோலாக மாற்றி அசத்தினார். அதன் பிறகு ஜூலியன் அல்வாரெஸ் முதல் பாதியில் ஒன்றும் இரண்டாம் பாதியில் 69வது நிமிடத்தில் ஒன்றும் கோலுக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.
புத்திசாலித்தனமான அணி
முந்தைய இரண்டு சுற்றுகள் இரண்டிலும் பெனாலிட்டி மூலம் வென்று முன்னேறிய குரோஷியாவை பெனாலிடிக்கு செல்ல விடாமல் தடுத்து ஆட்டமிழக்கச் செய்தனர் அர்ஜென்டினா அணியினர். அதுகுறித்து பேசிய மெஸ்ஸி, "நாங்கள் ஒரு புத்திசாலித்தனமான அணி, ஆட்டத்தை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும், தேவைப்படும்போது எப்படி உழைப்பை செலுத்த வேண்டும், எப்போது முன்னேற வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விவரமும் கணக்கிடப்படும்" என்று தனது முதல் உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்தில் உள்ள மெஸ்ஸி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், "சில நேரங்களில் நம் திட்டங்கள் சொதப்புகின்றன, நேர்த்தியாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உடனே அதனை மாற்றி சரியான பாதைக்கு கொண்டு வருவது ஸ்வாரஸ்யமாக உள்ளது", என்றார்.
நெதர்லாந்து போட்டி குறித்து
"முந்தைய போட்டியில் (நெதர்லாந்துக்கு எதிராக), கூடுதல் நேரம் கொடுக்கப்பட்ட பிறகு அவ்வளவு எளிதானதாக இல்லை. இன்று நாங்கள் சோர்வாகதான் இருந்தோம், ஆனால் இந்த வெற்றியைப் பெறுவது அவசியம் என்பதால் எங்களை நாங்களே அழுத்தம் கொடுத்து முன்னேறச் செய்தோம். நாங்கள் இந்த வழியில் தான் விளையாட வேண்டும் என்று தயாரானோம், ஏனென்றால் எங்களிடம் அதிக நேரம் பந்து இருக்காது என்று எங்களுக்கு தெரியும். இந்த போட்டியில் நிறைய ஓடவேண்டி இருக்கும் என்பதும் எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் இந்த போட்டிக்கு மிகச் சிறந்த முறையில் முன்னரே தயாராகி இருந்தோம்," என்று மெஸ்ஸி கூறினார்.
கோப்பை வெல்ல துடிக்கும் மெஸ்ஸி
தனது 25வது ஆட்டத்தின் மூலம் அதிக உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபற்றியவர் என்ற சாதனையை ஜேர்மனியின் லோதர் மத்தேயஸுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அர்ஜென்டினா தனது மூன்றாவது உலகக் கோப்பை பட்டத்தை வெல்வதற்கான முனைப்பில் விளையாடி வருகிறது. 1986 ஆம் ஆண்டு கடைசியாக உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா மெஸ்ஸி வந்த பிறகு புத்துணர்ச்சி பெற்ற அணியாக முதன்முதலாக கோப்பையை வெல்ல முயற்சி செய்கிறது.
ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி
"தனிப்பட்ட முறையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் அதை மிகவும் ரசிக்கிறேன், மேலும் எனது அணிக்கு விஷயங்களைச் செய்ய என்னால் உதவ முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று மெஸ்ஸி கூறினார். அர்ஜென்டினா அணி இம்முறை 2-1 என்ற கணக்கில் சவூதி அரேபியாவுடனான அதிர்ச்சி தோல்வியுடன் தொடங்கியது. அது குறித்து பேசிய அவர், "முதல் போட்டி ஒரு கடினமான அடி. இந்த வழியில் தொடங்குவது எங்களுக்கு கடினமாக இருந்தது, நாங்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியடைவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை, இது ஒரு சோதனை, ஆனால் அதன் பிறகு நாங்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை நாங்கள் நிரூபித்தோம். இது மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு இறுதிப் போட்டியாக இருந்தது. நாங்கள் வெற்றிபெறவில்லை என்றால் அது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்." என்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டியில் வெல்லும் அணியை எதிர்கொள்கிறது.