FIFA Worldcup 2022: இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் தகுதி - 18-ம் தேதி அர்ஜென்டீனாவுடன் மோதல்
FIFA Worldcup: 2-வது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவாவைத் தோற்கடித்தது பிரான்ஸ். வரும் 18-ம் தேதி இரவு அர்ஜென்டீனாவுடன் உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை.
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதியில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், அடுத்த அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில், நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், 2-0 என்ற கோல்கணக்கில் முதல்முறையாக அரை இறுதிக்குள் நுழைந்த மொரோக்காவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றது.
கருத்துக்கணிப்பிலும் வென்ற பிரான்ஸ்
முன்னதாக, நமது ஏபிபி நாடு சார்பாக ட்விட்டரில் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நமது ஏபிபி நாடு ட்விட்டர் பக்கத்தில் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவுடன் மோத போகும் அணி யார்? என்ற கேள்விக்கு 66.7 சதவீதம் நபர்கள் பிரான்ஸ் அணியே வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் என்றும், மொராக்கோ அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று 33.3 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பிற்கு ஏற்ற வகையில், தற்போது பிரான்ஸ் அணியும் வெற்றிப் பெற்றுள்ளது.
#FIFAWorldCup | உலக கோப்பை கால்பந்து: இறுதி போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோத போகும் அணி எது?https://t.co/wupaoCQKa2 | #MoroccoVsFrance #Morocco #France
— ABP Nadu (@abpnadu) December 14, 2022
69 ஆயிரம் ரசிகர்கள்:
நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பலமிகுந்த அர்ஜெண்டினா அணியுடன் குரோஷியா அணி செய்த தவறுகளை பாடமாக எடுத்துக்கொண்டு பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது மொராக்கோ. பல்வேறு வியூகங்களை மொரோக்கோ அமைத்திருந்தாலும், பிரான்ஸ் அணியின் வியூகத்திற்கு முன்னால் அனைத்தும் தரைமட்டமானது. அதனால், 2-0 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணி எளிதாக வெற்றிப் பெற்றது.
போட்டி ஆரம்பித்ததில் இருந்தே, பிரான்ஸ் அணியின் முன்களம், நடுவரிசை மற்றும் பின்வரிசையில் இருந்த வீரர்கள் அனைவரும், தத்தமது திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி விளையாடினர். இதனால், ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே, பிரான்ஸ் அணி தமது முதல் கோலைப் போட்டது. அந்த அணியின், ஹெர்ணாண்டஸ் முதல் கோலை போட்டு, முன்னணி தேடித் தந்தார். அதன்பின், மொரோக்கா வீரர்கள் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்.
இதனால் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதி மொரோக்கோ வசமே பந்து இருந்தது. இதனால் பிரான்ஸ் அணி வாய்ப்புக்காக காத்திருந்தது. அதற்கேற்ப 79வது நிமிடத்தில், பிரான்ஸ் வீரர் கோலோ சிறப்பாக கோலடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதன்பின், மொரோக்கோ அணி, கடுமையாகப் போராடினாலும், கோலடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு, பிரான்ஸ் அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது.
பிரான்ஸ் அணி, தமது அனுபவத்தின் மூலமே இந்த ஆட்டத்தை வென்றது என்றால்கூட தவறில்லை. ஏனெனில், புள்ளி விவரங்களின்படி, ஆ்ட்டத்தின் 62 சதவீதம் நேரம் மொரோக்காவின் வசமே பந்து இருந்தது. அதேபோல், 572 முறை பந்தை பாஸ் செய்து விளையாடியும், தடுப்பாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால், மொரோக்காவால் கோல் அடிக்க முடியவில்லை. பிரான்ஸ் அணியினரோ, 14 முறை கோல் கம்பம் அருகே பந்தைக் கடத்தி வந்து, கோலடிக்க முயற்சித்தனர். இதில், 2 முறை கோலடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றனர்.
ஆப்ரிக்க கண்டத்தில் இருந்து, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிக்குத் தகுதிப் பெற்ற முதல் நாடு என்ற பெருமையுடன் வீடு திரும்புகிறது மொரோக்கோ. இதுவே, மூன்றரை கோடி மக்கள் தொகைக் கொண்ட அந்த நாட்டிற்கு பெரிய சாதனை என்றாலும் மிகையில்லை.
நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில், குரோஷிய அணியை, 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி. ஆனால், இந்த முறை மெஸ்ஸியின் தலைமையிலான பலம் கொண்டு, அர்ஜென்டீனாவை சந்திக்கிறது பிரான்ஸ் அணி. இதனால், இந்த இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.