FIFA WC 2022 Date: கால்பந்து உலகக் கோப்பை தொடங்கும் தேதி மாற்றம்? - காரணம் என்ன?
கால்பந்து உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் கத்தாரில் தொடங்குகிறது.
உலக விளையாட்டு திருவிழாக்களில் முக்கியமான ஒன்று ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தொடர் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு கால்பந்து உலகக் கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்ந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உலக கால்பந்து ரசிகர்கள் பலர் அங்கு வர வாய்ப்பு உள்ளதால் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 21ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கு ஒரு நாள் முன்பாக வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் கால்பந்து உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 20ஆம் தேதி கத்தார்-ஈகுவேடார் அணிகளுக்கு எதிராக முதல் போட்டி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
#BREAKING Qatar World Cup to start a day earlier than planned on November 20: tournament sources pic.twitter.com/3Vq5jFnO4V
— AFP News Agency (@AFP) August 10, 2022
இதற்கு முன்பாக கத்தார்-ஈகுவேடார் அணிகளுக்கு எதிரான முதல் போட்டி நவம்பர் 21ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இது தற்போது ஒருநாள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு, 6.30 மணிக்கு, 9.30 மணிக்கு மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கும் தொடங்குகின்றன. ஃபிபா உலகக் கோப்பை தொடரில் ஒரு நாளில் 4 குரூப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்திய நேரப்படி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும் குரூப் போட்டிகள் டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 9ஆம் தேதி முதல் காலிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து டிசம்பர் 14,15 தேதிகள் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
பொதுவாக கால்பந்து உலகக் கோப்பை தொடர் ஜூன் -ஜூலை மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை கத்தாரில் நடைபெறுவதால் அங்கு ஜூன், ஜூலை காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக வீரர்கள் எளிதாக சோர்வு அடைய கூடும் என்பதால் போட்டி மாற்றிமைக்கப்பட்டது. ஆகவே இம்முறை கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்