Euro Cup 2020 : நிறவெறி விமர்சனங்கள் மன்னிக்க முடியாதது - இங்கிலாந்து கால்பந்து மேலாளர்
இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் மீதான நிறவெறி விமர்சனங்கள் மன்னிக்க முடியாதது என்று அந்த அணியின் மேலாளர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடைபெற்ற அதே சமயத்தில், யூரோ கோப்பை கால்பந்து தொடரும் நடைபெற்று வந்தது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்தும், இத்தாலி அணியும் மோதின. போட்டி நேர முடிவு வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கணக்கில் இத்தாலி வெற்றி பெற்று 50 ஆண்டுகளுக் பின்பு யூரோ கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் கோல் அடித்தனர். ஆனால், மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகியோர் அடித்த பெனால்டி ஷூட் அவுட்டை இத்தாலி கோல்கீப்பர் டோனாருமா தடுத்துவிட்டார். கோல் அடிக்கத் தவறிய மூன்று வீரர்களும் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள்.
இதனால், இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் சிலர் இந்த தோல்விக்கு காரணமான அந்த மூன்று வீரர்கள் மீது நிறவெறியை மையப்படுத்தி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிறவெறி விமர்சனங்கள் குறித்து இங்கிலாந்து கால்பந்து அணியின் மேலாளர் கரேத் சவுத்கேட் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ இங்கிலாந்து வீரர்கள் மீதான இனவெறி, நிறவெறித் தாக்குதல்கள் மன்னிக்க முடியாதவை. நாட்டின் தேசிய அணி என்பது அனைத்து மக்களின் ஒற்றுமையை குறிக்கிறது. இது தொடர வேண்டும். நாம் நமது நாட்டின் ஒற்றுமையை காண வேண்டும். யார் பெனால்டியில் பங்கு பெற வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்தேன். எந்த வீரரும் தானாக முன்வருவதில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிறவெறித் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், நமது ஹீரோக்கள் புகழ்வதற்கு தகுதியானவர்கள். நிறவெறியுடன் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. சமூக வலைதளத்தில் நிறவெறியுடன் கருத்துக்களைப் பதிவிட்டவர்கள் கண்டிப்பாக தங்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் காரில் நான் வீட்டுக்குச் செல்லும்போது பார்த்த காட்சிகள் மிக மோசமானவை. இதுதான் 2021ம் ஆண்டில் நமது நடத்தையா? வீரர்களை அவமானப்படுத்துவது யாருக்கு மகிழ்ச்சியைத் தரும்? உண்மையில் 2030ம் ஆண்டு உலககோப்பையை நடத்த இங்கிலாந்துக்கு தகுதி இருக்கிறதா? என்று தனது கண்டனத்தை பீட்டர்சன் பதிவிட்டிருந்தார்.