Euro 2020: 'Drink Water' : கோகோ கோலாவுக்கு நோ சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ..!
தண்ணீரை பருகுங்கள் - அனைவருக்கும் ரொனால்டோவின் மெசேஜ்!
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றிவிட்டு, தண்ணீரை பருகுங்கள் என்று கூறி தண்ணீர் பாட்டிலை தூக்கி காண்பித்த நிகழ்வு வைரலாகி வருகிறது. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான, போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது யூரோ சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வருகிறார். 36 வயதிலும் உடலை மிக கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரொனால்டோவை கண்டு அனைத்து அணிகளும் அஞ்சுகின்றன. இந்நிலையில் யூரோ சாம்பியன்ஷிப்பில் ஐம்பதாவது போட்டியை எதிர்நோக்கியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பையில் ஹங்கேரி அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் தனது ஆட்டத்தை துவங்குகிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் அணி இன்று இரவு புடாபெஸ்டில் உள்ள ஃபெரெங்க் புஸ்காஸ் மைதானத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்பாக ரொனால்டோ நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.
Cristiano Ronaldo was angry because they put Coca Cola in front of him at the Portugal press conference, instead of water! 😂
— FutbolBible (@FutbolBible) June 14, 2021
He moved them and said "Drink water" 😆pic.twitter.com/U1aJg9PcXq
அப்போது பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்புக்கு வந்து அமர்ந்தபோது, ”கோகோ கோலாவின் இரண்டு பாட்டில்கள் ரொனால்டோ முன்னிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதை கண்ட ரொனால்டோ அவற்றை எடுத்து மேஜையின் ஓரத்தில் கேமராவில் தெரியாத வண்ணம் வைத்தார். மேலும் அதற்கு பதிலாக ஒரு தண்ணீர் பாட்டிலை அனைவர் முன்னிலையிலும் தூக்கி காண்பித்து ‘தண்ணீர் குடியுங்கள்’ என்றார்.
விளையாட்டு வீரர்களில் மிகவும் கட்டுப்பாடான உணவு பழக்கங்களை கொண்டவர் ரொனால்டோ. அதுவே இந்த வயதிலும் அவர் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நொறுக்கு தீனிகள் எதுவுமே ரொனால்டோ எடுத்து கொள்ளமாட்டார். ஒரு முறை இது குறித்து பேசிய ரொனால்டோ "நான் என் மகனிடம் உணவு விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வேன், சில நேரங்களில் அவர் கோகோ கோலா மற்றும் ஃபாண்டாவை குடிப்பார், மொறுமொறுப்பான பண்டங்களை சாப்பிடுவார், எனக்கு அது பிடிக்காது என்று அவருக்குத் தெரியும்" என தெரிவித்திருந்தார்.
மகனிடமே இத்தனை கட்டுப்பாடு காட்டும் ரொனால்டோ, கோகோ கோலா பாட்டிலை நகர்த்தி வைத்ததில் ஆச்சரியம் இல்லை. தன்னை பார்த்து தேவையற்ற உணவு பழக்கத்தை யாரும் வளர்த்துக்கொள்ள கூடாது என்பதில் ரொனால்டோ மிக தெளிவாக இருப்பதே, அவர் அவ்வாறு செய்ததற்கு காரணம். ரொனால்டோ செய்த செயலை கண்ட அருகில் இருந்த பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் அதிர்ச்சியடைந்தாலும், அவர் கோகோ கோலா பாட்டிலை நகர்த்தி வைக்கவில்லை.