Watch Video: சுத்துப்போட்ட 11 பேரு! கதிகலங்கி நின்ற பேட்ஸ்மேன்! கவுன்டி கிரிக்கெட்டில் மிரட்டல்!
இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர், பவுலர் மட்டுமின்றி 9 வீரர்களும் பேட்ஸ்மேனை சுற்றி நின்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் ஏராளமான உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். தற்போது கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் வடிவில் நடைபெறும் இந்த தொடரில் சோமர்செட் அணியும், சர்ரே அணியும் மோதின.
சுத்துப்போட்ட 11 பேர்:
இதில், சர்ரே அணி 221 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியது. இலக்கை நோக்கி ஆடிய சர்ரே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 77.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, சோமர்செட் அணி வீரர்கள் சர்ரே அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்துவதற்காக தங்களது ஒட்டுமொத்த வீரர்களான 11 பேரும் பேட்ஸ்மேனை நெருங்கி நின்றனர்.
Somerset registered a win in the final 10 minutes of play.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 12, 2024
- All the 11 players in the frame! 🫡 pic.twitter.com/KxRX0X16It
சோமர்செட் அபார வெற்றி:
பந்துவீச்சாளர், விக்கெட்கீப்பர் தவிர மற்ற 9 பேரும் பேட்ஸ்மேன்களை சுற்றி வளைத்து நின்றனர். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் சர்ரே அணி பேட்ஸ்மேன்களான கீமர் ரோச்சையும், வோர்ரலையும் சுற்றி வளைத்து நின்றனர். 78வது ஓவரின் கடைசி பந்தில் டேனியல் வோர்ரல் டக் அவுட்டானார். இதனால், சோமர்செட் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கீமர் ரோச் 30 பந்துகளைச் சந்தித்து ரன் எதும் எடுக்காமல் களத்தில் இருந்தார்
முன்னதாக, சோமர்செட் அணி முதல் இன்னிங்சில் 317 ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்சில் சர்ரே அணி 321 ரன்களை எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் சோமர்செட் அணி 224 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 221 ரன்கள் இலக்குடன் ஆடிய சர்ரே அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சோமர்செட் அணிக்காக டாம் பான்டன் 132 ரன்களை முதல் இன்னிங்சில் விளாசினார். சர்ரே அணிக்காக ரியான் படேல் 70 ரன்களும், பென் கெட்டஸ் 50 ரன்களும், டாம் கரண் 86 ரன்களும் எடுத்தனர். இலக்கை நோக்கி ஆடும்போது சர்ரே அணி வீரர் டொமினிக் சிப்ளி மட்டும் 56 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். குறிப்பாக, சர்ரே அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 6 வீரர்கள் டக் அவுட்டாகினர்.