IPL 2021: ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் போட்டி: மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் இன்று மோதல்
2020 ஐபிஎல் தொடரில் மும்பை அணியை டெல்லி நான்கு முறை எதிர்கொண்டது. இதில், அனைத்திலும் மும்பையே வென்றுள்ளது.
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது லீக் போட்டியில் இன்று ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.
முதல் 3 போட்டிகளை மும்பை வான்கடே மைதானாத்தில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ், அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் பேட்டிங்கிற்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பன்ட், மார்கஸ் ஸ்டோயினிஸ், ஸ்மித் ஆகியோர் உள்ளனர். பவுலிங்கில் கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், ரபாடா, ஆவேஷ் கான் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று ஒருங்கிணைந்து விளையாடினால் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்திவிடலாம்.
மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தாலும், அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்திலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்த இரண்டு போட்டியிலும் கடைசி கட்டத்தில்தான் மும்பை வென்றது. இதுவே அந்த அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்கு ரோகித் சர்மா, டி காக், இஷான் கிசன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளனர். நடுவரிசையில் பொல்லார்ட் பலமாக இருக்கிறார். பும்ரா, போல்ட் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டுகின்றனர்.
லெக் ஸ்பின்னரான அமித் மிஸ்ரா 6 முறை ரோகித் ஷர்மாவின் விக்கெட்டை எடுத்துள்ளதால், ஆடுல் லெவனில் அவர் இன்று இடம்பெற வாய்ப்புள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட்டை 5 முறை வீழ்த்தியுள்ளார். இதனால், அவரின் பந்தை இன்று கவனமுடன் ரிஷப் எதிர்கொள்ள வேண்டும்.
டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அனைத்து வகையிலும் சமபலத்துடன் இருக்கிறது. இதனால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும். சேப்பாக்கம் மைதானத்தில் சேஸ் செய்வது மிகவும் கடினமாகும். இதனால், இன்றையப் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கலாம். இந்த இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
2020 ஐபிஎல் போட்டியில் இறுதிப்போட்டி என நான்கு முறை மும்பை - டெல்லி அணிகள் மோதின. இந்த அனைத்து போட்டிகளிலும் மும்பையே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.