Yograj Singh on Dhoni: "தோனியை மன்னிக்கவே மாட்டேன்! என் மகன் யுவராஜ்சிங் வாழ்க்கையை அழிச்சுட்டாரு": யோக்ராஜ்சிங் ஆவேசம்
Yograj Singh on MS Dhoni: தனது மகனின் வாழ்க்கையை அழித்ததே தோனிதான் என்று யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங். 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ்சிங்.
மிகச்சிறந்த இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ்சிங்கின் தந்தை தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு எம்.எஸ்.தோனியே காரணம் என்று அடிக்கடி விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் தோனியை அவர் விமர்சித்துள்ளார்.
அழித்ததே தோனிதான்:
தனியார் ஊடகம் ஒன்றுக்கு யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் தோனியை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். தோனி அவரது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான தோனி எனது மகனுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தார் என்பது இப்போதுதான் வெளிவருகிறது. அதை எப்போதும் நான் மன்னிக்கவே மாட்டேன்.
தோனி எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையையே அழித்துவிட்டார். இன்னும் 4-5 ஆண்டுகள் எனது மகன் விளையாடியிருக்க வேண்டும். எனது மகன் மாதிரி இன்னொருவர் பிறக்கவே முடியாது. கம்பீர், சேவாக் எல்லாம் இன்னொரு யுவராஜ் வரவே முடியாது என்று கூறியுள்ளனர். புற்றுநோயுடன் ஆடி இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த யுவராஜ்சிங்கிற்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
மன்னிக்கவே மாட்டேன்:
என் வாழ்க்கையில் எப்போதும் இரண்டு விஷயங்களை செய்ய மாட்டேன். என்னை ஏமாற்றியவர்களை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன். அவர்கள் எனது குடும்பமாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி.“
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தோனியை யுவராஜ்சிங்கின் தந்தை விமர்சிப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் ஏராளமான முறை விமர்சித்துள்ளார். யுவராஜ்சிங் ஐ.சி.சி. தூதராக நியமிக்கப்பட்டபோதும் தோனியை விமர்சித்தார். அப்போது, ஐ.பி.எல். 2024 பட்டத்தை சி.எஸ்.கே. ஏன் தோற்றார்கள்? நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். யுவராஜ்சிங் ஐ.சி.சி. தூதர். அவருக்கு வாழ்த்துகள். தோனிக்கு அதில் பொறாமை. யுவராஜ்சிங்கிற்கு தோனி கைகூட கொடுக்கவில்லை என்றார்.
தோனிக்கு முன்பே அணியில் இடம்பிடித்து சிறப்பாக ஆடி வந்த யுவராஜ்சிங்கே 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், சச்சின், டிராவிட் உள்ளிட்ட சீனியர்கள் அந்த தொடரில் விலகிக்கொள்ளவும், 2007ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை காரணமாகவும் அணியை வழிநடத்த புது தலைமையை பி.சி.சி.ஐ. தேடிக்கொண்டிருந்தது.
அனுபவமும், இளமையும் கலந்த யுவராஜ்சிங்கே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சச்சின் தந்த ஆலோசனையின்படி தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது யுவராஜ்சிங் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. அதன்பின்பு தனது மிரட்டலான அதிரடியால் தோனி தலைமையிலான இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்தார் யுவராஜ்சிங்.
2000ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ்சிங் 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்காக ஆடவில்லை. 42 வயதான யுவராஜ்சிங் 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 11 அரைசதங்களுடன் 1900 ரன்களும், 304 ஒருநாள் போட்டிகளில் ஆடி 14 சதங்கள், 52 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 701 ரன்களும், 58 டி20 போட்டிகளில் ஆடி 8 அரைசதங்களுடன் 1177 ரன்களும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் 132 போட்டிகளில் ஆடி 13 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 750 ரன்கள் எடுத்துள்ளார்.
சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங் டெஸ்டில் 9 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 111 விக்கெட்டுகளும், டி20யில் 28 விக்கெட்டுகளும், ஐ.பி.எல். தொடரிலும் 36 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.