(Source: ECI/ABP News/ABP Majha)
RCB-W vs UP-W, WPL 2023: 4வது போட்டியிலும் ஆர்.சி.பி படுதோல்வி; 10 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி வாரியர்ஸ் அபார வெற்றி..!
RCB-W vs UP-W, WPL 2023: ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் உ.பி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் போட்டி இந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் போட்டி போல் மிகவும் பரபரப்பான சுவாரஸ்யமான ஆட்டங்களால் மகளிர் பிரீமியர் லீக் தொடரும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறத் துவங்கியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் களமிறங்கியுள்ளது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் கேப்டனும் அதிரடிக்கு பெயர் போனவருமான மந்தனாவும், டிவைனையும் ஆட்டத்தினை தொடங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இருவரும் அடித்து ஆட ஆரம்பித்தனர். குறிப்பாக மந்தனா டிவைனுக்கு ஸ்டைரைக் கொடுத்து வந்தார். தனக்கு கிடைத்த பந்துகளை சிரமமின்றி ரன்கள் சேர்த்தார். ஆனால் மந்தனா தூக்கி அடிக்க முயற்சி செய்து 3 ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய பெரி அடித்து ஆட, பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் போட்டி வேறு மாதிரி சென்றது. போட்டி முழுவதும் படிப்படியாக உ.பி வாரியர்ஸ் அணியின் வசம் சென்றது. 19.3 ஓவரில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டும் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய உத்தரபிரதேச அணியின் தொடக்க வீராங்கனைகள் பெங்களூரு அணியை அடித்து நொருக்கி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. உ.பி அணியின் அலிசா ஹீலி அதிரடியாக ஆடி 96 ரன்கள் சேர்த்து இந்த பிரீமியர் லீக்கில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.