WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய சவால் என்ன?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கு ஆடும் லெவனை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணி, இந்த முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மும்முரமாக களமிறங்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.
ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக இருப்பது ஆடும் லெவனை சரியாக களமிறக்குவதே ஆகும். இறுதிப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தின் சீதோஷ்ண நிலை இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்திய அணிக்கு சற்று வித்தியாசமானதாகவே இருக்கும்.
இறுதிப்போட்டி:
இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணியில் கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, புஜாரா ஆகியோர் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேன்களாக உள்ளார்கள். சுழல் தாக்குதலுக்கு அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல் களமிறங்குவார்கள். பும்ரா இல்லாததால் வேகப்பந்துவீச்சில் முகமது ஷமியுடன் முகமது சிராஜ் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் மேலே கூறிய வீரர்களில் சுமார் 6 வீரர்கள் கட்டாயம் இறுதிப்போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. இதர இடங்களை பொறுத்தவரை பேட்டிங் பார்ம், அனுபவம், இங்கிலாந்து சீதோஷ்ண நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.
சுப்மன்கில் தொடங்குவாரா?
இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித்சர்மாவுடன் ஆட்டத்தை தொடங்கப்போவது யார்? என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது. கே.எல்.ராகுலா? சுப்மன்கில்லா? என்பது பெரும் குழப்பமாக உள்ளது. இளம் வீரரான சுப்மன்கில் ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்கு ஆடத் தொடங்கியது முதல் பேட்டிங்கில் வெளுத்து வாங்கி வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய சுப்மன்கில் இந்தாண்டு தொடக்கத்தில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்பியதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி 2 டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்த சுப்மன்கில் கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து சிறப்பான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வரும் சுப்மன்கில் பெரியளவில் வெளிநாட்டில் ஆடிய அனுபவம் இல்லை. ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் வேகத்தை அவர்களது சொந்த மண்ணிலே சுப்மன் சமாளிப்பாரா? என்பதும் பெரும் கேள்வி ஆகும். இவையனைத்தையும் அலசி ஆராய்ந்தே முடிவு எடுக்கப்படும்.
கே.எல்ராகுலுக்கு வாய்ப்பா?
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்கனவே வகித்துள்ள கே.எல்.ராகுல் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது அவரது இடத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் சொதப்பியதால் கடைசி 2 டெஸ்ட்டில் ஓரங்கட்டப்பட்டார். இங்கிலாந்து மண்ணை பொறுத்தவரை கே.எல்.ராகுல் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.
அவரது 7 டெஸ்ட் சதங்களில் 2 இங்கிலாந்தில் அடிக்கப்பட்டது ஆகும். அவரது தற்போதைய பேட்டிங் ஃபார்ம், இங்கிலாந்தில் அவரது பேட்டிங் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும். அதேசமயம் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பணியையும் சேர்த்து செய்வார் என்பதால் அதையும் தீவிரமாக அணி நிர்வாகம் ஆலோசிக்கும்.
ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர்:
இறுதிப்போட்டியில் முக்கிய ஆல்ரவுண்டர்களாக அஸ்வின், ஜடேஜா களமிறங்குவது உறுதி. இவர்களுடன் வேகப்பந்துவீச்சாளரும், பேட்ஸ்மேனுமாகிய ஹர்திக் பாண்ட்யா இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 2018க்கு பிறகு இந்திய அணிக்காக டெஸ்ட் ஆடாத ஹர்திக் பாண்ட்யா நேரடியாக இறுதிப்போட்டியில் களமிறங்குவது பயன் அளிக்குமா? அல்லது வீண் முயற்சியா? என்ற கேள்வியும் உள்ளது. ஆனால், தற்போது நல்ல பார்மில் உள்ள ஹர்திக் பாண்ட்யா தேவை இந்திய அணிக்கு உண்டா? என்பது இறுதி கட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இந்திய அணியின் பந்துவீச்சு பலமான பும்ராவின் உடல்நிலை அவர் இறுதிப்போட்டியில் பங்கேற்கமாட்டார் என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டது. வேகத்திற்கு மைதானம் ஒத்துழைக்கும் என்பதால் முகமது ஷமி, முகமது சிராஜ் இருவருடன் மூன்றாவது பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூரை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் ஆலோசிக்கும். ஏனென்றால் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சாளர் மட்டுமின்றி சிறந்த ஆல்ரவுண்டர். வலுவான சிக்ஸர்களை அடிக்கும் ஆற்றல் கொண்டவர். மேலும், ஸ்ரேயாஸ் அய்யர், ஸ்ரீகர்பரத் ஆகியோரும் இடம்பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்துவீச்சிலும் உமேஷ்யாதவ் இடம்பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆடும் வெலன்:
பேட்டிங் அல்லது பவுலிங் என எதற்கு சாதகமாக மைதானம் தயாரிக்கப்படுகிறதோ, அதற்கு ஏற்றாற்போல இந்திய ஆடும் லெவன் தயார் செய்யப்படும் என்பது மட்டும் உறுதி. மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதா? மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதா? மூன்று ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்குவதா? என்பதும் இந்திய அணியின் முன்பு உள்ள சவாலான விஷயம் ஆகும். புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டுமென்றால் இந்திய அணி மிகவும் கவனமாக ஆடும் லெவனை தயார் செய்ய வேண்டும் என்பது மிக மிக அவசியம்.