KL Rahul: ’கோலி என்னிடம் இதை மட்டும் பண்ண சொன்னார்’.. வெற்றிக்கு பிறகு கே.எல்.ராகுல் ஜாலி டாக்..!
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது.
2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டி ஆரம்பம் முதலே அற்புதமான ஆட்டமாக அமைந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இலக்கு எளிதானது என்று களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 வீரர்களை டக் அவுட் செய்தனர்.
விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி அரைசதம் கண்டு இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். மேலும், இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.
2023 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கே.எல். ராகுல், போட்டிக்குப் பிறகு ஜாலியாக பேசினார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் இன்னிங்ஸ் முடிந்து சிறிது நேரம் குளித்துவிட்டு ஓய்வெடுக்க நினைத்ததாகவும், ஆனால் இந்திய அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்ததால் தான் வர நேரிட்டதாகவும் 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' கே.எல்.ராகுல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் குளித்துவிட்டு அரை மணி நேரம் ஓய்வெடுக்க நினைத்தேன். ஆனால், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து 3 விக்கெட்கள் விழுந்ததும் நான் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. களத்திற்கு வந்தேன்.
"𝘐 𝘵𝘩𝘰𝘶𝘨𝘩𝘵 𝘐'𝘥 𝘨𝘦𝘵 𝘢 𝘨𝘰𝘰𝘥 𝘴𝘩𝘰𝘸𝘦𝘳." pic.twitter.com/ZSgcNAJZ2v
— Rajasthan Royals (@rajasthanroyals) October 8, 2023
கொஞ்ச நேரம் இங்கு டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாட வேண்டும் என்று விராட் என்னிடம் கூறினார். அதையே இருவரும் செயல்படுத்தினோம். அணிக்காக சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி. தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு உதவியாக இருந்தது. ஆனால் பின்னர் பனி எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது.” என்றார்.
பிட்ச் எப்படி இருந்தது..?
பிட்ச் குறித்து பேசிய கே.எல்.ராகுல், “ நாங்கள் பந்து வீசும்போது புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறிது உதவி கிடைத்தது. பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். பேட்டிங்கிற்கு இது ஒரு சிறந்த விக்கெட் அல்ல, ஆனால் அதிக சிரமங்களும் கொடுக்கவில்லை. உண்மையில், இது சவாலான பிட்சுக்கு நல்ல பிட்ச் என்று நினைக்கிறேன். தென்னிந்தியாவில் குறிப்பாக இதே போன்ற ஆடுகளங்கள் சென்னையில்தான் பார்க்க முடியும்” என்றார்.
தனது சதத்தை தவறவிட்டது குறித்து பேசிய ராகுல், “கடைசி பந்தை நான் நன்றாக அடித்தேன். நான் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்ய விரும்பினேன். அடுத்த முறை சிறப்பாக பேட்டிங் செய்து சதத்தை பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன்.’ என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பையில் சேப்பாக்கத்தில் இந்தியா விளையாடுவது இதுவே முதல் மற்றும் கடைசி போட்டி ஆகும்.