நமக்கு தெரிந்தது சர்ஃபராஸ் கான்… கடைசி வரை வாய்ப்பே கிடைக்காமல் போன 5 ரஞ்சி நாயகர்களை தெரியுமா?
பல்வேறு காரணங்களால் பலருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். இன்று நாம் பார்ப்பது ஒரு சர்ஃபராஸ் கான்.
தேசிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்பது எல்லா கிரிக்கெட் வீரரும் விரும்பக்கூடிய மிகப்பெரிய சாதனையாகும். வெள்ளை உடையில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு கிரிக்கெட் வீரர்கள், எண்ணற்ற வருடங்கள் உழைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் அங்கு இருப்பது வெறும் 15 இடங்கள் தான். அதனால் நன்றாக ஆடியும் அந்த இடத்தை அடையாமலே போனவர்கள் பலர். அதிலும் குறிப்பாக சில மிக உயர்ந்த தரம் வாய்ந்த வீரர்கள் பல வருடங்களாக உள்நாட்டு கிரிக்கெட் மட்டுமே ஆடியிருக்கிறார்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். இன்று நாம் பார்ப்பது ஒரு சர்ஃபராஸ் கான். அவர் போல செய்த சாதனைகள் கவனிக்கப்படாமல் போன மிகச்சிறந்த 5 வீரர்கள் இதோ.
- அமோல் முசும்தார்
இந்தக் கேள்வியைக் கேட்கும் போது பல ஆண்டுகளாக கிரிக்கெட் பார்க்கும் பலர் நினைக்கும் முதல் பெயர், முஸும்தார். ஏறக்குறைய 20 ஆண்டுகால ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் வாழ்க்கையில், முசும்தார் 48 சராசரியுடன் 11,000 ரன்களை எடுத்தார், அதில் அவர் 30 சதங்களை குவித்தார். இந்தியாவுக்காக ஒருபோதும் விளையாடாத பேட்டர்களில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அவர்.
- ரஜிந்தர் கோயல்
பிஷன் பேடி, எரபள்ளி பிரசன்னா, எஸ் வெங்கடராகவன் மற்றும் பகவத் சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய நால்வர் ஸ்பின் கூட்டணி வேறு எந்த வீரரையும் அந்த சமயத்தில் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த பெரும் மதில் சுவரை தாண்டிய திறன் படைத்தவர்களால் மட்டுமே இந்திய அணிக்குள் செல்ல முடியும், ஆனால் கடைசிவரை அதனை யாருமே செய்யவில்லை. ஹரியானாவின் ராஜிந்தர் கோயலுக்கும் அது கைகூடவில்லை. ராஜிந்தர் கோயல், ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 18.58 சராசரியில் 750 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2.10 எகனாமியில் பந்துவீசி, ஒருபோதும் இந்திய அணிக்காக ஆடாத வீரர் ஆவார். 18 போட்டிகளில் 10-விக்கெட் வீழ்தியுள்ள அவர், ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் விக்கெட்டுகளை எடுப்பதற்கும் அவர் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டிருந்தார், ஆனாலும் பிரபலமான நால்வர் குழுவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இவை போதுமானதாக இல்லை.
- பத்மகர் ஷிவால்கர்
கோயலின் அதே குழுவில் மற்றொரு இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சாளர் இருந்தார். பத்மகர் ஷிவால்கர் சராசரி 20 க்கு கீழே வைத்திருந்த ஒரு குறிப்பிடத்தக்க பந்து வீச்சாளர். மும்பையின் பத்மகர் ஷிவால்கர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தர கிரிக்கெட்டில் ஆடியுள்ளார். அவரது நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையில் சராசரியாக 19.69, மற்றும் பொருளாதார விகிதம் இரண்டிற்கு மேல் வைத்துள்ளார். கோயல் சந்தித்த தடைகளைதான் இவரும் சந்தித்தார், ஆனால் அது அந்த சகாப்தத்தில் இந்திய சுழல் பந்துவீச்சின் ஆழத்தை தான் காட்டுகிறது. வெறும் 15 பேரில் 6 சுழல்பந்து வீச்சாளர்களை சேர்ப்பதன் சிரமத்தையும் இங்கு புரிந்துகொள்ள வேண்டி உள்ளது.
- கே.பி.பாஸ்கர்
கிருஷ்ணன் பாஸ்கர் பிள்ளை, ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக 95 ஆட்டங்களில் விளையாடினார், மேலும் சராசரியாக 52-க்கு மேல் வைத்திருந்தார். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க இதுவே போதுமானதுதான், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 5400 ரன்கள் குவித்ததுடன் 18 சதங்களுக்கு மேல் அடித்துள்ளார். 1980 களில் ஒரு நேர்த்தியான மற்றும் செயல்திறன் மிக்க பேட்டராக வளம் வந்த அவரோடு ஆடிய பலர் இந்திய அணியில் ஆடி ஜாம்பவான்களாக மாறிய நிலையில், அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
- ரணதீப் போஸ்
2006-07 சீசனில் பெங்கால் அணிக்காக ரணதேப் போஸ் 57 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இது அந்த நேரத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளரால் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்சம் ஆகும். அப்போது இந்திய அனி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அதில் இடம்பெற அந்த சாதனை போதுமானதாக இருந்தது. ஆனால் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எக்ஸ்பிரஸ் வேகம் அவரிடம் இல்லை என்ற வாதத்துடன், அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆயினும்கூட, 317 ரஞ்சி விக்கெட்டுகள் 25.80 சராசரி வைத்திருந்த அவர் ஒரு உயர்தர வேகப்பந்து வீச்சாளர் என்பதை காட்டினார்.