INDIA In ICC Events: ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் எதிர்காலம் என்ன? பெரும் ஓட்டையை சந்திக்க போகும் பிளேயிங் லெவன்
INDIA In ICC Events: அடுத்தடுத்து நடைபெற உள்ள ஐசிசி தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்ள இருக்கும் முக்கிய பிரச்னைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
INDIA In ICC Events: அடுத்தடுத்து நடபெற உள்ள ஐசிசி தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கு, அதன் பேட்டிங் பெரிய பிரச்னயாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
நொறுங்கிய ரசிகர்களின் இதயங்கள்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய உலகக் கோப்பை இறுதிப் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை 43வது ஓவரிலேயே எட்டிய ஆஸ்திரேலியா அணி, 6வது முறையாக உலகக் கோப்பையை தூக்கியது. இதன் மூலம், 2003ம் ஆண்டு இறுதிப் போட்டி தோல்விக்கு ஆஸ்திரேலியாவை பழிவாங்குவோம் என்ற, இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு சுக்கு நூறாக உடைந்தது. அதோடு, 2013ம் ஆண்டிற்குப் பிறகு எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கமும் தொடர்கிறது.
அடுத்து வரும் ஐசிசி தொடர்கள்:
உலகக் கோப்பை முடிந்துவிட்டது என கருதுவதற்குள், அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற ஐசிசி தொடர்களுக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. 2024ல் டி-20 உலகக் கோப்பை, 2025-ல் சாம்பியன்ஸ் டிராபி, 2026ம் ஆண்டு 10வது டி-20 உலகக் கோப்பை, 2027ம் ஆண்டு மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பை என அடுத்தடுத்த ஐசிசி தொடர்கள் வரிசை கட்டி வருகின்றன. இந்த கோப்பைகளை வெல்ல பல்வேறு அணிகளும் இப்போதிலிருந்தே ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன.
ஐசிசி தொடர்களை வெல்ல அவசியமானது எது?
சர்வதேச அணிகள் பங்கேற்கும் ஐசிசி தொடர்களானது, இரு அணிகளுக்கு இடையேயான மோதல் மற்றும் முத்தரப்பு தொடர்கள் ஆகியவற்றை காட்டிலும் மிகவும் சவாலானது ஆகும். இந்த கோப்பைகளை வெல்ல அணிக்கு சில அடிப்படை அம்சங்கள் மட்டுமின்றி, ஆச்சரியப்படும் வகையிலான சில அம்சங்களும் அவசியம். குறிப்பாக அதிரடியாக விளையாடும் இளம் வீரர்கள், சூழலை பொறுத்து அணிக்கு தேவையானதை செய்யும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இந்த இரண்டு தரப்பினரையும் புரிந்து கொண்டு வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு கேப்டன் ஆகிய காரணிகள் இன்றியமையாதது ஆகும். கேப்டனின் பங்கு என்பது ஒரு அணியில் மிக முக்கியமானது. ஒரு வீரர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பதே கேப்டன் தான். அதற்கு அனுபவமும், அந்த வீரரை பற்றிய முழு புரிதலையும் கேப்டன் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு சரியான உதாரணம் தான் 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி.
கோலி & ரோகித் இடங்களை நிரப்பப் போவது யார்?
இந்திய அணியில் தற்போதைய சூழலில் பேட்டிங் தூண்களாக இருப்பவர்கள் கோலி மற்றும் ரோகித் தான். அவர்களது அனுபவம் தான் நடப்பு உலகக் கோப்பையில் கூட பல இடங்களில் அணிக்கு உதவியது. இருவரும் 35 வயதை கடந்துள்ள நிலையில், ஏற்கனவே டி-20 அணியில் இடம்பெறுவது இல்லை. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. உலகக் கோப்பை தோல்வி மற்றும் வயது மூப்பு ஆகிய காரணங்களால், 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் இவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பும் குறைவாக தான் உள்ளது. எனவே, அதிரடி பேட்டிங் மட்டுமின்றி, அனுபவமும் வாய்ந்த கோலி மற்றும் ரோகித் ஓய்வு பெற்றால், அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவது என்பது இந்திய அணிக்கு பெரும் சவாலாக மாறக்கூடும். பந்துவீச்சில் ஷமி மற்றும் ஆல்-ரவுண்டர் ஜடேஜாவ்ன் இடமும் இதே நிலைக்கு தான் தள்ளப்படும்.
அனுபவம் எங்கே?
தற்போதைய சூழலில் இந்திய அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருப்பவர்கள் கோலி, ரோகித், ஜடேஜா மற்றும் ஷமி மட்டுமே. மற்ற வீரர்கள் அனைவருமே ஒருநாள், டி-20 பிரிவுகளில் தலா 100-க்கும் குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ளனர். இதனால், மேற்குறிப்பிட்ட வீரர்கள் ஒருவேளை அடுத்தடுத்து ஓய்வு பெற்றால், இக்கட்டான நிலையில் இந்திய அணியை வழிநடத்துவதற்கான ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் இல்லாமல் போகும் சூழல் உள்ளது.
யார் அந்த கேப்டன்:
28 வருடங்களுக்குப் பிறகு தோனி தலைமையில் கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு தோனி, கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய மூன்று அனுபவம் வாய்ந்த கேப்டன்கள் முயன்றும், 3 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய அணிக்கு தோல்வியே மிச்சம். இதனால், அடுத்த உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தப் போகும் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் 3 ஃபார்மெட்களுக்கும் ரோகித் சர்மா தான் கேப்டன் என கூறப்பட்டாலும், பாண்ட்யா, கே. எல். ராகுல், பும்ரா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் மற்றும் ரிஷப் பண்ட் என பல கேப்டன்களின் தலைமையிலும் இந்திய அணி விளையாடி வருகிறது. இப்படி மாறுபட்ட ஸ்டைல் கொண்ட கேப்டன்களின் தலைமையின் கீழ் விளையாடினால், வீரர்கள் நிலையான ஆட்டத்தை வழங்குவதில் தடுமாறக் கூடும். எனவே, 2027ம் ஆண்டு பிளேயிங் லெவனில் உள்ள அனைத்து வீரர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்ல இருக்கும், அந்த ஒரு கேப்டன் யார் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
2027-ல் கோப்பை வெல்ல வாய்ப்பு உண்டா?
இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகனாக 2027ம் ஆண்டு, இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பும். ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் என்பது கடினமாக தான் உள்ளது. 1983ம் ஆண்டிற்குப் பிறகு அனுபவம் மற்றும் அதிரடி கலந்த ஒரு பிளேயிங் லெவன், அவர்களை வழிநடத்த ஒரு துடிப்பான கேப்டன் கிடைக்க இந்திய அணிக்கு 28 ஆண்டுகள் ஆனது. ஆனால், அதே மாதிரியான ஒரு பிளேயிங் லெவன் மற்றும் கேப்டன் 12 ஆண்டுகள் இடைவெளியிலேயே 2023 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அமைந்தது. அப்படி இருந்தும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாவில்லை. இந்நிலையில், கோலி, ரோகித், ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோர் ஓய்வு பெற்றால், அவர்களுக்கான இடத்தை நிரப்புவதற்கே இந்திய அணிக்கு சில ஆண்டுகளாகும். இதனால், 2027ம் ஆண்டில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமானால், பெரிய மேஜிக் தான் நிகழ வேண்டும்..!