WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் என்னாகும்? ரிசர்வ் டே இருக்கா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது டிராவில் முடிந்தால் என்ன நடக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில், நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டி டிராவில் முடிந்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பிய்ஷிப்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திடம் முந்தைய தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா, WTC புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த முறை ஒரு படி முன்னேறி சென்று கோப்பையை வெல்ல ஆர்வமாக இருக்கும்.
6-வது நாள் உள்ளது
இந்த கோப்பையின் வெற்றியாளரைத் தீர்மானிக்க 5 நாட்கள் போதும் என்றாலும், ஜூன் 07 முதல் ஜூன் 11 வரை ஆடும் இரு அணிகளும் பெரிய பெரிய இன்னிங்ஸ் ஆடி முடிவை எட்டாமல், போட்டி டிராவில் முடிவடையும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு வேளை மழை குறுக்கீடு ஏற்பட்டால், WTC இறுதிப் போட்டிக்கு ICC ஆறாவது நாளை ரிசர்வ் நாளாக வைத்துள்ளது. ஆனால், போட்டியானது டிராவில் முடிந்தால் என்ன நடக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
கோப்பை பகிர்ந்துகொள்ளப்படும்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில் முடிவடைந்தால், கோப்பையை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பகிர்ந்து கொள்ளும், இரு நாடுகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பை பகிர்ந்து கொள்ளப்படும். மற்ற நிகழ்வுகளில், இதுபோன்ற தடைகள் ஏற்பட்டால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஓவர்கள் குறைப்பு, சூப்பர் ஓவர் பயன்படுத்துவார்கள். அதிலும் இல்லை என்றால் லீக் போட்டிகளில் எந்த நிலையில் இருந்தார்கள் என்பது பொறுத்து கோப்பை வழங்கப்படும், ஆனால், WTC இறுதிப் போட்டியில் அத்தகைய நடவடிக்கை இருக்காது.
பின்னர் ரிசர்வ் நாள் எதற்கு?
ரிசர்வ் டே என்பது போட்டியில் மழை பொழியும்போது, தீவிர வானிலை காரணமாக நேரம் இழந்து ஏதோ ஒரு நாளில் ஓவர்கள் முழுவதும் வீசப்படாமல் இருந்தால் மட்டுமே வழங்கப்படும். இழந்த நேரத்தை ஈடுசெய்ய, வெற்றியாளரைக் கண்டறிய ரிசர்வ் தினத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், மழை பெய்யாமல் 5 நாட்களில் ஆட்டம் முடிவை எட்டவில்லை என்றாலும், ரிசர்வ் டே கிடைக்காது. கூடுதல் நாள் சேர்க்கப்படுவதற்கு, போட்டியில் மழையின் பங்கு வேண்டும், அது நாள் முழுவதுமாகவும் அல்லது சில மணிநேரங்களாகவும் கூட இருக்கலாம்.