"நாங்க ரொம்ப நல்லவங்க.. பாகிஸ்தானுக்கு வாங்க" - இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த சோயிப் மாலிக்!
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய அணியினர் பாகிஸ்தான் வர வேண்டும் என்றும், நாங்கள் மிகவும் நல்ல விருந்தோம்பல் பண்பு கொண்டவர்கள் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கூறியுள்ளார்.
உலகின் முக்கியமான கிரிக்கெட் அணிகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் அணி எப்போது மோதிக்கொண்டாலும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் விறுவிறுப்பு இருக்கும். இரு நாடுகள் இடையேயான அரசு நிர்வாக காரணமாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் தனிப்பட்ட தொடர்கள் நடைபெற்று பல ஆண்டுகளாகி விட்டது.
சாம்பியன்ஸ் டிராபி:
தற்போது, அடுத்தாண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று பங்கேற்காது என்றே ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாடுகளில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நாங்கள் மிகவும் நல்லவர்கள்:
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நாடுகள் இடையே என்ன பிரச்சினை இருந்தாலும் அது ஒரு தனிப்பிரச்சினை. அது தனித்தனியாக தீர்க்கப்பட வேண்டும். விளையாட்டில் அரசியல் வரக்கூடாது.
கடந்தாண்டு பாகிஸ்தான் அணி சென்றது. தற்போது இந்திய அணிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் விளையாடாத இந்திய வீரர்கள் பலர் உள்ளனர். இங்கு வந்து விளையாடினால் அது அவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நாங்கள் மிகவும் நல்ல மனிதர்கள். விருந்தோம்பலை விரும்பும் நபர்கள். எனவே, இந்திய அணி கண்டிப்பாக வர வேண்டும் என்ற நாம் விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
சோயிப் மாலிக் 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதம், 1 இரட்டை சதம் மற்றும் 8 அரைசதங்களுடன் 1898 ரன்கள் எடுத்துள்ளார். 287 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 44 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 534 ரன்களும் எடுத்துள்ளார். 124 டி20 போட்டிகளில் ஆடி 9 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 435 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான மாலிக் டெஸ்டில் 32 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 158 விக்கெட்டுகளும், டி20யில் 28 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
மறக்க முடியாத இலங்கை மீதான தாக்குதல்:
இதையடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் மட்டும் மோதி வருகின்றனர். இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு கடைசியாக 2008ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2013ம் ஆண்டுதான் இந்தியாவும் – பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கடைசி தொடர் ஆகும்.
2009ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் நாட்டின் மீது மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நாட்டிற்கு எந்த நாடும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்த சூழலில், கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்பின்பு, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.