IND vs PAK: நண்பேண்டா நீ..! கோலியை தோளில் தூக்கி சுற்றிய ரோகித்..! வைரலாகும் வீடியோ..
IND vs PAK : உலககோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட்கோலியை ரோகித்சர்மா தலையில் தூக்கிச் சுற்றினார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்க, பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் விராட் கோலி. கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் கோலி தவித்து கொண்டிருந்தார். அணியில் அவரின் இடமே கேள்விக்குறியானது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். அவை அனைத்திற்கும் கோலி தனது ஆட்டத்தினால் பதில் அளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நசீம் ஷா வீசிய ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போல்டு ஆனார். 2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 7 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர், ரோகித் சர்மா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹரிஸ் ரெளஃப் பந்துவீச்சில் ரிஸ்வானிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
View this post on Instagram
சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல், வந்த வேகத்தில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா களம் புகுந்தார். இதையடுத்துதான், ஆட்டமே இந்தியாவின் பக்கம் திரும்ப தொடங்கியது.
கோலியும் பாண்டியாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி, 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என அரை சதம் பதிவு செய்தார். 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா கடைசி நிமிட பதற்றத்துடன் விளையாடியது.
19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் பேக் டூ பேக் சிக்ஸர் அடித்து அசத்தினார் கோலி. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை தூக்கி அடித்த பாண்டியா பாபர் ஆஸாமிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து, தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கினார்.
5 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுத்தார். கடைசி ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் கோலி. இதனிடையே நோ பால் என போட்டி நடுவர் அறிவித்தார். இதனால், பாகிஸ்தான் வீரர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. நடுவரிடம் முறையிட்டனர். எனினும், நோ பால் என்று போட்டி நடுவர் உறுதிப்படுத்தினார்.
ஃப்ரீ ஹிட் வாய்ப்பு கிடைக்க 3 பந்துகளுக்கு 6 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஃப்ரீ ஹிட்டில் போல்டு ஆனார் கோலி. எனினும் அவுட் இல்லை என்பதால் 3 ரன்களை ஓடி எடுத்தனர். 2 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவை என்று இருந்தது. எதிர்பாராதவிதமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அஸ்வின் களம் இறங்கினார். கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், 5வது பந்து ஒயிட் ஆக அமைந்த நிலையில் கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெற்றிபெற்றவுடன், பெவிலியனில் இருந்த இந்திய அணி வீரர்கள், உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்றனர். மைதானத்திற்கு உள்ளே வந்த ரோகித், கோலியை தூக்கி சுத்த ஆரம்பித்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.