Virat Kohli: சொந்த மண்ணில் 4 ஆயிரம் ரன்கள்.. பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரையன் லாரா..! சாதனை மேல் சாதனை படைத்த கோலி..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய விராட்கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்துள்ள நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. இன்று நடைபெற்ற 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் சுப்மன்கில் சதமடித்ததுடன், 14 இன்னிங்ஸ்களுக்கு பிறகு விராட்கோலி அரைசதம் விளாசியதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதனை மேல் சாதனை:
விராட்கோலி இன்று அரைசதம் விளாசியது மட்டுமின்றி மேலும் 2 சாதனைகளையும் படைத்துள்ளார். கடந்தாண்டு ஜனவரி மாதம் அரைசதம் விளாசிய விராட்கோலி அதற்கு பிறகு ஆடிய 14 இன்னிங்ஸ்களில் எந்த அரைசதமும் விளாசாத நிலையில், இன்று அரைசதம் விளாசியுள்ளார்.
அதேபோல, சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் விராட்கோலி இன்று படைத்துள்ளார். இன்றைய போட்டியில் விராட்கோலி 42 ரன்களை எட்டியபோது அவர் இந்த சாதனையை படைத்தார். இதற்கு முன்பு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் 4 பேர் மட்டுமே. சச்சின், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக் ஆகியோரின் பட்டியலில் விராட்கோலி தற்போது இணைந்துள்ளார்.
லாராவை பின்னுக்குத் தள்ளிய விராட்:
இன்றைய போட்டியில் 59 ரன்களுடன் களத்தில் உள்ள விராட்கோலி ஜாம்பவான் பிரையன் லாராவையும் பின்னுக்குத் தள்ளி மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். அதாவது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள் பட்டியலில் பிரையன் லாராவை விராட்கோலி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
பிரையன் லாரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 2856 ரன்கள், ஒருநாள் போட்டியில் 1858 ரன்கள் என மொத்தம் 4714 ரன்களை குவித்துள்ளார். விராட்கோலி இன்றைய போட்டி மூலம் அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். விராட்கோலி இன்று விளாசிய 59 ரன்கள் மூலமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து வடிவ ( டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள்) கிரிக்கெட் போட்டிகளிலும் 4723 ரன்களை குவித்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில், ஒருநாள் போட்டியில் 2083 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 1846 ரன்களும், டி20யில் 794 ரன்களும் அடங்கும்.
இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தொட முடியாத இடத்தில் இருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 3630 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3077 ரன்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 707 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி சாதனைகள் மேல் சாதனைகளை படைப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விராட்கோலி இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி 59 ரன்களுடன் களத்தில் இருப்பதால் நாளை அவர் சதம் விளாசுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: IND vs AUS: அப்பாடா.. 14 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அரைசதம் விளாசிய கோலி..! கொண்டாடும் ரசிகர்கள்
மேலும் படிக்க: டி20 வரலாற்றில் இப்படி ஒரு ரன் சேஸா..? கிளாடியேட்டர்ஸ் சாதனையை 48 மணி நேரத்தில் உடைத்த சுல்தான்ஸ்!