Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
2025ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு எப்படி அமைந்தது? என்பதை கீழே காணலாம்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும். விராட் கோலியும் அபார அரைசதத்தாலும், இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் சதத்தாலும் இந்தியா வெற்றி பெற்றதுடன் தொடரை கைப்பற்றியது.
கோலிக்கு 2025 எப்படி?
இந்த 2025ம் ஆண்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய அணிக்காக ஆடிய கடைசி சர்வதேச போட்டி இது மட்டுமே ஆகும். 2025ம் ஆண்டில் விராட் கோலியின் பேட்டிங் எப்படி? என்பதை கீழே காணலாம்.
இந்தாண்டு விராட் கோலி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பெரியளவு ரன்களை குவிக்காத சூழலில் தனது ஓய்வை அறிவித்தார்.
17 ரன்கள், 6 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( சிட்னி டெஸ்ட்)
ஒருநாள் போட்டிகள்:
5 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக ( கட்டாக்)
52 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக ( அகமதாபாத்)
22 ரன்கள் - வங்கதேசத்திற்கு எதிராக ( துபாய்)
100 ரன்கள் - பாகிஸ்தானுக்கு எதிராக ( துபாய்)
11 ரன்கள் - நியூசிலாந்திற்கு எதிராக ( துபாய்)
84 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( துபாய்)
1 ரன் - நியூசிலாந்திற்கு எதிராக (துபாய்)
0 ரன் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( பெர்த்)
0 ரன் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( அடிலெய்ட்)
74 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( சிட்னி)
135 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( ராஞ்சி)
102 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( ராய்ப்பூர்)
65 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( விசாகப்பட்டினம்)
இதில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஆட்டமிழக்காலும் ஆடியுள்ளார்.
3 சதங்கள், 4 அரைசதங்கள்:
2025ம் ஆண்டில் விராட் கோலி டெஸ்ட் போட்டி உள்பட மொத்தம் 15 இன்னிங்சில் ஆடி 674 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும். 56.16 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். 88.91 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவர் ஒருநாள் பாேட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். 2025ம் ஆண்டில் விராட் கோலி ஒரு வீரராக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஒரு தனிப்பட்ட வடிவ கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (51) சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்தார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர் முதல் போட்டியில் விளாசிய சதம் 52வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.
விராட் கோலி 2027ம் ஆண்டு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஆடி வருகிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலே இந்திய அணிக்காக ஆட உள்ளனர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
2025ம் ஆண்டை விராட்கோலி தொடங்கியது திருப்திகரமாக இல்லாவிட்டாலும், அவர் முடித்தவிதம் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடுத்தடுத்து சதம் விளாசியதும், சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபிக்கும் விதமாக விசாகப்பட்டினத்தில் போட்டியை முடித்துக் கொடுத்ததும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதும் விராட் கோலிக்கு மகிழ்ச்சிகரமான ஒன்றாக அமைந்துள்ளது.




















