Virat Kohli: 50வது சதத்தை விளாசினார் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி! படைக்கப்பட்டது புதிய வரலாறு!
Virat Kohli 50th Century:ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50வது சதத்தை விளாசி விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் இந்திய அணிக்கு ரோகித்சர்மா அபாரமான தொடக்கம் அளித்தார்.
50வது சதம்:
சதத்தை நோக்கி ஆடிய சுப்மன்கில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேற ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அபாரமாக ஆடினார், நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசிய விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 50வது சதத்தை விளாசினார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலே அதிக சதம் விளாசிய வீரர் என்ற கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். யாராலும் வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி முறியடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் சாதனை முறியடிப்பு:
இந்த உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியபோதே, விராட் கோலி தன்னுடைய 50வது சதத்தை விளாசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கோலி இன்று தன்னுடைய 50வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
ரோகித் சர்மா 47 ரன்களில் அவுட்டான பிறகு, களம் புகுந்த விராட் கோலி இந்த போட்டியிங் களமிறங்கியது முதல் நிதானமாக ஆடினார். அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய பிறகு விராட் கோலி பவுண்டரிகளையும், சிங்கிள்ஸ்களையும் எடுத்தார். சதைப்பிடிப்பு காரணமாக சுப்மன்கில் தொடரை விட்டு வெளியேறிய பிறகு, ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடிக்கு மாறினார்.
117 ரன்னில் அவுட்:
சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் எட்டிய கிரிக்கெட் சாதனையை விராட் கோலி 279 இன்னிங்ஸ்களில் எட்டி புதிய வரலாறு படைத்தார். விவியின் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் மற்றும் கால்பந்து ஜாம்பவான் என அனைவரது முன்னிலும் விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார்.
சதமடித்த பிறகு அதிரடி ஆட்டத்திற்கு மாறிய விராட் கோலி சவுதீ பந்தில் அவுட்டானார். அவர் 113 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 35 வயதான விராட் கோலி 291 ஒருநாள் போட்டிகளில் ஆடி 279 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 50 சதங்கள், 71 அரைசதங்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 794 ரன்களை விளாசியுள்ளார்.
இந்த தொடரில் மட்டும் விராட் கோலி இன்றைய சதத்துடன் 3வது சதத்தை விளாசியுள்ளார். மேலும், இன்றைய போட்டி மூலம் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஒரு தொடரில் மட்டும் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். முறியடிக்கப்படாத சாதனை என்று கருதப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் 49வது சதத்தை சச்சினின் சொந்த மைதானத்தில் விராட் கோலி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Rohit Sharma Record: உலகக்கோப்பையில் 50 சிக்ஸர்கள்! புதிய வரலாறு படைத்த ஹிட் மேன் ரோகித்சர்மா!
மேலும் படிக்க: Kohli ODI Century: சச்சின் சாதனையை முறியடித்த கிங் கோலி.. ஒரு நாள் கிரிக்கெட்டில் 50ஆவது சதம் அடித்து அசத்தல்