Virat Kohli Century:1204 நாட்கள் தவம்… 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் சதம் விளாசினார் விராட்..! கோலியை கொண்டாடும் ரசிகர்கள்..!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் விளாசும் சதம் ஆகும்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட்:
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. இதில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் சதமடித்து அசத்தினர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியில் 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று நடந்த 3ஆம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா (35 ரன்கள்), சுப்மன் கில் (128 ரன்கள்), புஜாரா (42 ரன்கள்) எடுத்து அவுட்டாயினர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
1204 நாட்களுக்கு பிறகு சதம்:
இதனிடையே இன்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 3 ஆண்டுகளுக்கு பின் அதாவது 1204 நாட்களுக்குப் பின் விராட் கோலி 28வது சதத்தை நிறைவு செய்துள்ளார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக விராட் கோலி சதமடித்திருந்தார். இதனை விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.