Vinod Kambli Birthday: சச்சினின் கூட்டாளி... அவரை விட திறமைசாலி .... பெயர் எடுத்த வினோத் காம்ப்ளி பிறந்த தினம் இன்று!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி இன்று தன்னுடைய 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1990களில் இந்திய கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் அளவிற்கு மிகவும் வேகமாக வளரந்த வீரர் என்றால் அது அவருடைய நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி தான். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கு முன்பாகவே இவர் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான ஒருவர். அவர் இன்று தன்னுடைய 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் கடந்து வந்த பாதைகள் என்னென்ன?
பள்ளி போட்டியில் சாதனை:
மும்பையில் பிறந்த பல சிறுவர்களை போல் வினோத் காம்ப்ளியும் தன்னுடைய சிறுவயது முதல் கிரிக்கெட் மீது காதல் கொண்டார். தன்னுடைய பள்ளி பருவம் முதலே கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தொடங்கினார். இவரும் சச்சின் டெண்டுல்கரும் ஷாரதா வித்யாசரம் பள்ளிக்காக விளையாட தொடங்கினர். 1988ஆம் ஆண்டு ஒரு பள்ளிப்போட்டியில் இவர்கள் இருவரும் சேர்ந்து 664 ரன்கள் விளாசினர். அதில் வினோத் காம்ப்ளி மட்டும் 345 ரன்கள் அடித்தார். அத்துடன் அந்தப் போட்டியில் பந்துவீச்சிலும் இவர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்த சாதனை மூலம் சச்சின்-காம்ப்ளி ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சர்வதேச போட்டிகள்:
தன்னுடைய நெருங்கிய நண்பர் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு 1992ஆம் ஆண்டு வினோத் காம்ப்ளி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இவருடைய ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஏனென்றால் 14 இன்னிங்ஸில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து அசத்தினார். மிகவும் குறைவான இன்னிங்ஸில் 1000 டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இன்று வரை அவர் தன்வசம் வைத்துள்ளார்.
இவை தவிர டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்கு முன்பாகவே இரட்டை சதம் கடந்து அசத்தினர். ஜிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் அடித்து அசத்தினார். தன்னுடைய முதல் 8 டெஸ்ட் இன்னிங்ஸில் 2 சதம் மற்றும் 2 இரட்டை சதங்கள் விளாசி வினோத் காம்ப்ளி அசத்தினார். தன்னுடைய 24 வயதிற்குள் வினோத் காம்ப்ளி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.20 என்ற சராசரியுடன் 1084 ரன்கள் அடித்தார்.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளை அவர் சரியாக சோபிக்கவில்லை. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் தவிர சதம் கடந்த ஒரே இந்திய வீரர் இவர் மட்டும் தான். அந்த உலக கோப்பை தொடரில் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் அடித்து காம்ப்ளி அசத்தினார். 2000ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசியாக காம்ப்ளி விளையாடினார். 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 14 அரைசதம் மட்டுமே காம்ப்ளி அடித்தார்.
கிரிக்கெட் வாழ்க்கைக்கு பின்பு:
தன்னுடைய 28 வயதில் வினோத் காம்ப்ளி இந்திய கிரிக்கெட் அணியில் தன்னுடைய இடத்தை இழந்தார். அதன்பின்னர் இவர் இரண்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கினார். மும்பையில் இந்த லோக் பாரதி கட்சியின் துணை தலைவராக அரசியலில் குதித்தார். 2009ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். எனினும் அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார். 2010ஆம் ஆண்டு ஆண்ட்ரியா ஹேவிட் என்ற மாடல் அழகியை இவர் திருமணம் செய்து கொண்டார்.