Vijay Hazare Trophy | பாபா சகோதரர்கள் அசத்தல்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்ற தமிழ்நாடு அணி..
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தமிழ்நாடு அணி கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற காலிறுதி போட்டியில் கர்நாடகா அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி சௌராஸ்டிரா அணியை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌராஸ்டிரா அணி செல்டன் ஜாக்சனின் அசத்தலான சதத்தால் 50 ஓவர்களின் முடிவில் 310 ரன்கள் எடுத்தது. 311 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த கேப்டன் விஜய் சங்கரும் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.
3ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பாபா அப்ரஜித் மற்றும் இந்தரஜித் சகோதரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தரஜித் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு வந்த தினேஷ் கார்த்திக் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அப்ரஜித் அரைசதம் கடந்து நிதானமாக ஆடிவந்தார். அவரும் வாஷிங்டன் சுந்தரும் ஜோடி சேர்ந்து வேகமாக தமிழ்நாடு அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய பாபா அப்ரஜித் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேபோல் வாஷிங்டன் சுந்தரும் 70 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார்.
இவர்களை தொடர்ந்து தமிழ்நாடு அணியின் அதிரடி ஃபினிசர் ஷாரூக் கானும் 17 ரன்களில் அவுட் ஆகினார். கடைசி 4 ஓவர்களில் தமிழ்நாடு அணிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. தமிழ்நாடு அணி 8 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது களத்தில் இருந்த சாய் கிஷார் சிறப்பாக விளையாடி கடைசி பந்தில் பவுண்டரி விளாசி தமிழ்நாடு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
தமிழ்நாடு அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணியை சந்திக்கிறது. விஜய் ஹசாரே தொடரை இதுவரை தமிழ்நாடு அணி 5 முறை வென்றுள்ளது. கடந்த முறை நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரை மும்பை அணி வென்று இருந்தது. கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி இறுதி போட்டியில் கர்நாடகா அணியிடம் தோல்வி அடைந்தது. ஏற்கெனவே இந்தாண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரை தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:12 ஆண்டுகளுக்கு முன்... விராட் கோலியின் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று ! மெமரீஸ்..