Vijay Hazare Trophy : சாய்கிஷோரின் சர்ப்ரைஸ்... ஷாரூக்கானின் ருத்ரதாண்டவம்.. கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு!
கர்நாடகாவுக்கு டார்கெட் 355. ஆனால், அந்த அணியால் 203 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 39 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டும் ஆனது.
விஜய் ஹசாரே தொடரின் காலிறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய இந்த போட்டியில் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியும் மனீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியும் மோதிய இந்த போட்டியில் மனீஷ் பாண்டேவே டாஸை வென்றிருந்தார். முதலில் ஃபீல்டிங் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். தமிழக அணியில் ஹரி நிஷாந்திற்கு பதில் பாபா அபராஜித்தும் சஞ்சய் யாதவிற்கு பதில் சிலம்பரசனும் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு Vs கர்நாடாக இந்த ரைவல்ரி எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாததாக இருக்கும். விஜய் ஹசாரே தொடரில் இதுவரை இரு அணிகளும் மோதிய போட்டிகளில் கர்நாடகா 13 முறையும் தமிழ்நாடு 10 முறையும் வென்றிருக்கின்றன. கடைசி இந்த சீசனின் லீக் போட்டியில் இரு அணிகளும் மோதியிருந்தது. அந்த போட்டியில் தமிழ்நாடு அணி ரொம்பவே எளிதாக வென்றிருந்தது.
இந்நிலையில் முக்கியமான கட்டத்தில் நாக் அவுட் சுற்றில் தமிழ்நாடு கர்நாடகாவும் மீண்டும் மோதியிருந்தது. தமிழ்நாடு முதல் பேட்டிங்.
தமிழக அணியின் சார்பில் பாபா அபராஜித்தும் ஜெகதீசனும் ஓப்பனர்களாக இறங்கினர். பாபா அபராஜித் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 6 வது ஓவரிலேயே 13 ரன்களில் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். இதன்பிறகு, நம்பர் 3 இல் சர்ப்ரைஸாக பௌலரான சாய் கிஷோர் களமிறங்கினார். ஜெகதீசன் + சாய் கிஷோர் இந்த வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இருவரும் இணைந்து 147 ரன்களுக்கு கூட்டணி போட்டனர். சர்ப்ரஸாக டாப் ஆர்டரில் வந்திருந்த சாய் கிஷோர் 71 பந்துகளில் 61 ரன்களை எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார். இன்னொரு பக்கம் ஜெகதீசனும் வழக்கம்போல தனது க்ளாஸான ஆட்டத்தை ஆடி சதமடித்திருந்தார். ஜெகதீசன் 101 பந்துகளில் 102 ரன்களை அடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் பிறகு தினேஷ் கார்த்திக் 44 ரன்களையும் இந்திரஜித் 31 ரன்களையும் அடித்து கணிசமான பங்களிப்பை கொடுத்திருந்தனர். கடைசி 10 ஓவர்களில் ஷாரூக்கான் ஆடிய ஆட்டம்தான் தமிழக அணியை வேற லெவலுக்கு அழைத்து சென்றது. தனது வழக்கமான பாணியில் அதிரடியில் வெளுத்தெடுத்த ஷாரூக்கான் 39 பந்துகளில் 79 ரன்களை எடுத்திருந்தார். 7 பவுண்டரிக்களையும் 6 சிக்சர்களையும் அடித்து நாட் அவுட்டாக இருந்தார். ஷாரூக்கானின் அதிரடியால் கடைசி 10 ஓவர்களில் மட்டும் தமிழக அணி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இதனால் தமிழக அணி 50 ஓவர்கள் முடிவில் 354 ரன்களை எட்டியது.
கர்நாடகாவுக்கு டார்கெட் 355. ஆனால், அந்த அணியால் 203 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 39 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டும் ஆனது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் டக் அவுட் ஆக, கேப்டன் மனீஷ் பாண்டே 9 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். மிடில் ஆர்டர் வீரர்களான அபினவ் மனோகர், ஸ்ரீநிவாஸ் சரத் ஆகியோர் மட்டுமே கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து நின்று ஆடினர். அபினவ் 34 ரன்களையும் ஸ்ரீநிவாஸ் 43 ரன்களையும் அடித்திருந்தனர். இவர்களுக்கு பிறகு வேறெந்த வீரரும் பெரிதாக பெர்ஃபார்ம் செய்யவில்லை என்பதால் கர்நாடகம் எளிதில் வீழ்ந்தது. தமிழக அணி சார்பில் 8 ஓவர்கள் வீசி 36 ரன்கள் மட்டுமே கொடுத்து வேகப்பந்து வீச்சாளர் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளையும் 9 ஓவர்கல் வீசி 43 ரன்கள் மட்டுமே கொடுத்து வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். தமிழ்நாடு 151 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றிருந்தது.
ஒயிட்பால் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி சமீபமாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு சீசன்களாக சையத் முஷ்தாக் அலி தொடரை தமிழகமே வென்றிருக்கிறது. இப்போது விஜய் ஹசாரே தொடரிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. குறிப்பிட்ட தனிப்பட்ட வீரர்களை மட்டுமே நம்பியில்லாமல் ஒட்டுமொத்தமாக ஒரு அணியாகவே சிறப்பாக செயல்படுவதே தமிழக அணியின் பலமாக இருக்கிறது. இந்த தமிழக அணியிலிருந்து பல வீரர்களும் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, ஷாரூக்கான். ஹார்ட் ஹிட்டராக ஃபினிஷர் ரோலில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உச்சபட்ச தொகைக்கு ஏலம்போகும் வீரர்களின் பட்டியலில் ஷாரூக்கானின் பெயரும் இடம்பெற்றால் கூட பெரிய ஆச்சர்யமில்லை. மேலும், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு ஷாரூக்கான் அறிமுகமாகும் வாய்ப்பும் அதிகமிருக்கிறது. மணிமாறன் சித்தார்த், சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோரும் தங்களுக்கான டிமாண்டை உருவாக்கி நல்ல எதிர்காலத்திற்கான பாதையை வடிவமைத்திருக்கின்றனர். சூப்பர் ஹீரோக்களால் சூழப்பட்ட இந்த தமிழக அணி விஜய் ஹசாரே தொடரை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.