Raj Bawa in U19 Finals: பேட்டிங்கில் சரவெடி, பவுலிங்கில் அதிரடி... எதிரணியைப் புரட்டிப்போடும் இந்த ராஜ் பவா யார்?
உகாண்டாவுக்கு எதிரான போட்டியில் 162 ரன்கள் விளாசிய ராஜ் பவா, U19 கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யஷ் துல் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. ஏற்கனவே, U19 உலகக்கோப்பையை நான்கு முறை கைப்பற்றி இருக்கும் இந்திய அணி, ஐந்தாவது முறையாக வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற U19 இங்கிலாந்து அணி, பேட்டிங் தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வந்த வேகவத்தில் ஓப்பனர் ஜேக்கப் பெத்தல், ரவி குமாரின் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதிரடி தொடக்கமாக அமைந்த இந்திய அணிக்கு, நான்காவது ஓவரில் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார் ரவி குமார். ஆரம்பமே சொதப்பலாக அமைந்த இங்கிலாந்து அணிக்கு மேலும் சிக்கல் கொடுத்திருக்கிறார் இளம் வீரர் ராஜ் பவா. ரவி குமார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது அடுத்து, வரிசையாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திருக்கிறார் ராஜ் பவா.
யார் இந்த ராஜ் பவா?
ஹிமாச்சல் பிரதேசம் நஹன் பகுதியைச் சேர்ந்த ராஜ் பவாவுக்கு, விளையாட்டு புதிதல்ல. குடும்பமே விளையாட்டு துறையைச் சேர்ந்ததுதான். 1948-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடிய தர்லோசன் சிங் பவா, இவருக்கு தாத்தா முறை. தந்தை சுக்விந்தர் பவா, கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்தவர். யுவராஜ் சிங், விஆர்வி சிங் போன்ற வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி தந்தவர்.
முதலில் ஹாக்கி பேட்டை எடுத்த ராஜ் பவாவின் தந்தை, பின்னர் கிரிக்கெட்டில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். காயம் காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாமல் போனதால், பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். தனது தந்தையுடன் தரம்சலா கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றபோது, ராஜ் பவாவிற்கு கிரிக்கெட் காதல் ஏற்பட்டிருக்கிறது.
கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய அவர், இயல்பாகவே சிறப்பான பேட்டிங், பவுலிங் செய்யக்கூடியவராக முன்னேறினார். இதனால், U19 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக கவனிக்க வைத்தார். 2021 U19 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடி இருக்கிறார் ராஜ் பவா. அதனை தொடந்து, U19 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த அவர், இந்த தொடரில் சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார்.
உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில், 326 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அதிரடி காடியது. இந்த போட்டியில், 8 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் என 162 ரன்கள் விளாசிய ராஜ் பவா, U19 கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பேட்டிங்கில் அசத்தி வரும் ராஜ் பவா, இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். போட்டி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சில விக்கெட்டுகளை கைப்பற்றி சேஸிங்கிலும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ய ராஜ் பவாவின் பங்கு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்