TNPL 2023: திருச்சிக்கு தண்ணி காட்டிய மதுரை; வெற்றிக்கணக்கை துவங்க முடியாமல் தத்தளிக்கும் திருச்சி
TNPL 2023: திருச்சிக்கு எதிரான போட்டியில் மதுரை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
TNPL 2023: ஐபிஎல் தொடரை தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதளவும் வரவேற்கப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7வது சீசன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 20 போட்டிகள் நடந்த நிலையில் நேற்று நடந்த 21வது போட்டியில் திருச்சி மற்றும் மதுரை அணிகள் மோதின. சேலம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. மிகவும் நம்பிக்கையாக களமிறங்கிய திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. மதுரை அணியின் வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் திருச்சி அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜுவின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் ரன் கணக்கை தொடங்கும் முன்னே விக்கெட் கணக்கை தொடங்கிய திருச்சி அணிக்கு சரிவாக அமைந்தது. அதன் பின்னர் மதுரை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தியதால், திருச்சி அணிக்கு மிகவும் சவாலாக அமைந்தது. குறிப்பாக, இரண்டாவது விக்கெட்டை அணியின் ஸ்கோர் 7 ரன்களாக இருந்தபோது திருச்சி அணி இழந்தது. சரிவில் இருந்த திருச்சி அணியை மணி பாரதியுடன் இணைந்து ஃப்ரான்ஸிஸ் ரொகின்ஸ் மற்றும் ஃபெராரியோ மீட்க முயற்சித்தனர்.
ஆனால் இவர்கள் ஓரளவிற்கு அணியை நல்ல நிலைக்கு வரும் போது தங்களது விக்கெட்டை இழந்தனர். அதன் பின்னர் வந்த திருச்சி அணியின் அனைத்து வீரர்களும் 18.5 ஓவரில் தங்களது அனைத்து விக்கெட்டையும் இழந்து 107 ரன்கள் மட்டும் தான் எடுத்தது, மதுரை அணி சார்பில், சரவணன் 3 விக்கெட்டுகளும் குர்ஜப்நீட் சிங் மற்றும் அஜய் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன் பின்னர் 108 ரன்களை நோக்கி களமிறங்கிய மதுரை அணி, குறைந்த இலக்கு என்பதால், நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடியது. குறிப்பாக களமிறங்கிய வீரர்கள் பந்துகளை வீணாக்காமல் குறைந்தபட்சம் ஒரு ரன் வீதம் என பொறுப்புடன் ஆடினர். குறிப்பிட்ட இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தாலும் அது மதுரை அணிக்கு வெற்றியை எட்டுவதில் எந்த சிக்கலும் ஏற்படுத்திவிடவில்லை. மதுரை அணி சிறப்பாக பந்து வீசியதுடன் பேட்டிங்கும் செய்தது. இறுதியில் மதுரை அணி 17 ஓவர்களில் வெற்றி இலக்கான 108 ரன்களை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது மதுரை அணி. திருச்சி அணியைப் பொறுத்தமட்டில், இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல், புள்ளி கணக்கை துவங்காமல், புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது.