Tilak Varma: ஆசியக்கோப்பை அணியில் திலக் வர்மா… ஏன் இவ்வளவு விமர்சனம்? மூன்று முக்கிய காரணங்கள் இதுதான்!
திலக் வர்மாவை சேர்க்கும் முடிவை சிலர் வரவேற்கவும் செய்யும் நிலையில், இது ஏன் தவறான நடவடிக்கை என்பதற்கான மூன்று காரணங்களைப் பார்ப்போம்.
வரவிருக்கும் 2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகள் இந்த தொடரை சேர்ந்து நடத்துகின்றன.
திலக் வர்மா தேர்வு
சமீபத்தில் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சர்வதேச அளவில் அறிமுகமான திலக், தனது ஆக்ரோஷமான கிரிக்கெட்டின் மூலம் பலரையும் கவர்ந்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-3 என தோல்வியடைந்த போதிலும், ஹைதராபாத்தை சேர்ந்த இளம் வீரர் திலக் ஐந்து போட்டிகளில் 57.67 சராசரியுடன், 140.65 ஸ்ட்ரைக் ரேட்டில் 173 ரன்கள் குவித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். அந்த வெற்றிகரமான அறிமுகத்திற்கு பின்னர், திலக் ODI அணியிலும் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தன. ஆனால் இவ்வளவு சீக்கிரம் சேர்க்கப்படுவார் என்று யாரும் எதிர்பா்க்கவில்லை. ஆசியக்கோப்பை அணி உலகக்கோப்பைக்குமான முன்னோட்ட அணி என்று பார்க்கும் பட்சத்தில் இவருடைய தேர்வு பலரை சிந்திக்க வைத்துள்ளது. அதுபோக ஆடும் லெவன் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே தெரியாத நிலையில், உலகக்கோப்பை சோதனை ஒட்டமாகவும் இதனை எடுத்துக்கொள்ள முடியாது. திலக் வர்மாவை சேர்க்கும் முடிவை சிலர் வரவேற்கவும் செய்யும் நிலையில், இது ஏன் தவறான நடவடிக்கை என்பதற்கான மூன்று காரணங்களைப் பார்ப்போம்.
இலங்கை மைதானங்களில் கூடுதல் ஸ்பின்னர் இருந்திருக்கலாம்
அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கான்டினென்டல் போட்டிகளில் இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருக்கும். தேர்வுக் குழு குல்தீப் யாதவை தேர்ந்தெடுத்திருந்தாலும், ஆஃப் ஸ்பின்னர்கள் யாருமே இல்லை. ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது பிரச்சினையாக இருக்கலாம்.
அயர்லாந்தில் மோசமான ஃபார்ம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் அவர் தனது சிறப்பான பேட்டிங் ஃபார்ம் மூலம் வெளிச்சத்தைப் பெற்றார். ஆனால், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவரது ஃபார்ம் சரிவை சந்தித்துள்ளது. மூத்த கிரிக்கெட் வீரர்கள் இல்லாத நிலையில் 3வது இடத்தில் பேட்டிங் செய்த திலக் வர்மா கடுமையாக போராடி வருகிறார். 20 வயதான அவர் இதுவரை அயர்லாந்தில் ஆடிய இரண்டு T20I போட்டிகளில் ஒரு கோல்டன் டக் உட்பட ஒரு ரன் மட்டுமே எடுத்துள்ளார். அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக ஆட்டமிழப்பதை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொள்ள தொடங்கி விட்டனர்.
ஒருநாள் போட்டிகளில் திலக் வர்மாவின் அனுபவம்
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி, டி20 போட்டிகளில் அவர் ஈர்த்திருந்தாலும், திலக் இன்னும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் கூட ஆகவில்லை. எனவே புதிதாக ஒரு சோதனையை இந்திய அணி பெரிய தொடர்களில் செய்வது பெரும் ஆபத்து. அதுவும் ஆசியக்கோப்பை போன்ற குறுகிய தொடர்களில் எல்லா ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றியைக் காண நிறைய முதிர்ச்சியும் உறுதியும் தேவை. சூர்யகுமார் யாதவே இதற்குச் சான்று. அவர் டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்டராக இருக்கிறார். ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் இன்னும் போராடுகிறார். அவர் 26 ஒருநாள் போட்டிகளில் ஆடி 24.33 என்ற மிகக்குறைந்த சராசரியைக் கொண்டுள்ளார். இன்னும் 2023 இல் அது 14.11 ஆக உள்ளது.